Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் பெங்களூரு கலக்கல் வெற்றி! * கெய்ல் 82 ரன்கள் விளாசல் * வீழ்ந்தது மும்பை அணி

பெங்களூரு கலக்கல் வெற்றி! * கெய்ல் 82 ரன்கள் விளாசல் * வீழ்ந்தது மும்பை அணி

மும்பை:ஐ.பி.எல்., லீக் போட்டியில் கெய்ல் மீண்டும் புயல் வேகத்தில் 82 ரன்கள் விளாச, பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம்

"பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. சொந்த மண்ணில் சொதப்பிய மும்பை அணி, ஏமாற்றம் அளித்தது.

மும்பையில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 54வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

திணறல் துவக்கம்:

ஆடுகளம் பந்துவீச்சுக்கு "சூப்பராக' ஒத்துழைக்க, மும்பை அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. வினய் குமாரின் முதல் ஓவரில் பிராங்க்ளின்(1), ரோகித் சர்மா(0) அவுட்டாகினர். இதற்கு பதிலடியாக வினய் குமாரின் 3வது ஓவரில் சச்சின் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்து அசத்தினார். இந்த நேரத்தில் ஹர்ஷால் படேல் பந்தில் சச்சின்(24) வெளியேற சிக்கல் ஏற்பட்டது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். ராயுடு(22) ஏமாற்றினார்.

கார்த்திக் ஆறுதல்:

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தினேஷ் கார்த்திக் ஆறுதல் அளித்தார். பவுண்டரிகளாக விளாசிய இவர், அணியின் ஸ்கோரை ஓரளவுக்கு உயர்த்தினார். மீண்டும் பந்துவீச வந்த முரளிதரன் இரட்டை "அடி' கொடுத்து திருப்புமுனை ஏற்படுத்தினார். 4வது பந்தில் தினேஷ் கார்த்திக்கை(44) அவுட்டாக்கினார். 5வது பந்தில் "ஆபத்தான' டுவைன் ஸ்மித்தை(2) வெளியேற்றினார். அடுத்த பந்தில் போலார்டு ஒரு ரன் எடுக்க, முரளிதரனின் "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.

பின் கேப்டன் ஹர்பஜன், போலார்டு சேர்ந்து அதிரடியாக ரன் சேர்த்தனர். வினய் குமார் ஓவரில் போலார்டு 2 சிக்சர் அடித்தார். இவரை முன்னதாக களமிறக்காதது புரியாத புதிராக இருந்தது. மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன்(20), போலார்டு(21) அவுட்டாகாமல் இருந்தனர்.

நல்ல துவக்கம்:

சுலப இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு தில்ஷன், கெய்ல் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். ஆர்.பி.சிங் ஓவரில் இவர்கள் 3 பவுண்டரி அடித்தனர். தொடர்ந்து ஆர்.பி.சிங் ஓவரில் கெய்ல் ஒரு சிக்சர் அடித்தார். ஓஜா சுழலில் தில்ஷன்(19) சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார்.

"ஹாட்ரிக்' சிக்சர்:

பின் வழக்கம் போல தனது வாணவேடிக்கையை துவங்கிய கெய்ல், பிரக்யான் ஓஜா ஓவரில் "ஹாட்ரிக்' சிக்சர் அடித்து, அரைசதம் எட்டினார். இவருக்கு அருமையாக "கம்பெனி' கொடுத்த விராத் கோஹ்லி, தன்பங்கிற்கு போலார்டு பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து ரோகித் சர்மா பந்தை சிக்சருக்கு விரட்டிய கோஹ்லி, வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 18 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. கெய்ல் 82(59 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), கோஹ்லி 36 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை கெய்ல் வென்றார்.

அம்பயரின் குழப்பம்

பிரக்யான் ஓஜா பந்தில் பெங்களூரு வீரர் தில்ஷனுக்கு அம்பயர் பில்லி பவுடன் தவறாக "அவுட்' கொடுத்தார். முதலில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் "கேட்ச்சில்' வெளியேறியதாக கூறப்பட்டது. பின் எல்.பி.டபிள்யு., என மாற்றப்பட்டது. "ரீப்ளே' பார்த்த போது, பந்து தில்ஷனின் கால் "பேடில்' படாதது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து விரக்தியுடன் பெவிலியன் திரும்பிய தில்ஷன் "கிளவுசை' தூக்கி எறிந்ததை காண முடிந்தது.

"ஆரஞ்ச்' தொப்பி

நேற்று அதிரடியாக ஆடிய கெய்ல், இத்தொடரில் அதிக ரன் எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். இதற்கான "ஆரஞ்ச்' தொப்பியை பெற்றார். இவர் 11 போட்டிகளில் 515 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் டில்லி கேப்டன் சேவக்(11 போட்டி, 468 ரன்கள்) உள்ளார்.

500 "சிக்சர்'

நேற்று ரோகித் சர்மா பந்தில் கெய்ல் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இது, இத்தொடரின் 500வது சிக்சராக அமைந்தது.

"வில்லன்' ஸ்மித்

சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து மும்பைக்கு வெற்றி தேடித் தந்தார் டுவைன் ஸ்மித். நேற்று ஆர்.பி.சிங் பந்தில் கெய்ல் கொடுத்த சுலப "கேட்ச்சை' கோட்டைவிட்ட இவர், வில்லனாக மாறினார். அப்போது கெய்ல் 21 ரன்கள் தான் எடுத்திருந்தார்.

"மெகா' வெற்றி

விக்கெட் அடிப்படையில்(9) இத்தொடரின் மிகப் பெரிய வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை, டில்லி, கோல்கட்டா அணிகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தன.