வேட்டை மன்னன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி, அடுத்து அவரது வாலு படத்திலும் ஜோடியாகி இருக்கிறார். மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில்
அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் நடித்த அம்மணிக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பு. சின்ன குஷ்பு என்று தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் ஹன்சிகாவுக்கு, சமீபத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் குவிகிறது. தற்போது சிங்கம் பார்ட்-2, சிம்புவின் வேட்டை மன்னன் போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுதவிர சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் வேட்டை மன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்புவுடன் ஜோடி போட இருக்கிறார். வேட்டை மன்னன் படத்தை தொடர்ந்து சிம்பு, புதுமுகம் விஜய் இயக்கும் வாலு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஹன்சிகா தான் ஜோடி. இவர்கள் தவிர சிம்புவின் எல்லா படங்களிலும் வலம் வந்து கொண்டு இருக்கும் சந்தானம், வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். வேட்டை மன்னன் படத்திற்கு பிறகு சிம்பு வாலு படத்தில் நடிக்கிறார்.


