ஜெய்ப்பூர்:ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் அசத்தும் ராஜஸ்தான் அணியை, பலவீனமான
டெக்கான் அணி சமாளிக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின், லீக் போட்டிகள் தற்போது நடக்கிறது. இதில் இன்று நடக்கும் 20 வது லீக் போட்டியில் டிராவிட்டின் ராஜஸ்தான் ராயல்ஸ், சங்ககராவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன.
வெற்றி அதிகம்:
தொடரின் துவக்கத்தில் டிராவிட் அனுபவத்தை நம்பி மட்டும் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால், இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று அசத்தலாக துவக்கத்தை தந்துள்ளது.
இதற்கு அணியின் இளம் வீரர் ரகானே தரும் அதிரடி துவக்கம் முக்கிய காரணம். இத்தொடரில் முதல் சதம் அடித்த இவர் கொடுக்கும், வேகத்தை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்ளும் ஓவேஸ் ஷாவும் சிறப்பான ஆட்டத்தை தருகிறார். இதுவரை இத்தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள (260, 204 ரன்கள்) இந்த இருவரும், இன்றும் தங்கள் அதிரடியை தொடர காத்திருக்கின்றனர்.
கேப்டன் டிராவிட்டும் தன்பங்கிற்கு நிலையான ஆட்டத்தை தருகிறார். "மிடில் ஆர்டரில் வரும் ஹாட்ஜ், மனேரியா, ஜோகன் போத்தாவும் இருப்பது பலம் தான்.
திரும்பிய பலம்:
வேகப்பந்து வீச்சில் சித்தார்த் திரிவேதி, பெங்களூருவுக்கு எதிராக 4 விக்கெட் சாய்த்தது நம்பிக்கை தந்துள்ளது. அமித் சிங், பங்கஜ் சிங் இருவரும் தங்கள் பங்கிற்கு ஜொலிக்கின்றனர். சுழலில் போத்தா இன்னும் சிறப்பாக செயல்பட்டால் நல்லது.
பிராட் ஹாக் தனது அனுபவத்தை இன்றும் தொடரலாம். தவிர, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாவது (8 விக்., 3 போட்டி) இடத்தில் இருக்கும் கெவான் கூப்பரும் அணிக்கு திரும்பினால் கூடுதல் பலம் பெறலாம்.
இரண்டு தோல்வி:
டெக்கான் அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த சோகத்தில் உள்ளது. இருப்பினும், ஒரு வார ஓய்வுக்குப் பின் களமிறங்கும் இந்த அணிக்கு மாற்றம் கிடைக்கும் என்று நம்புவோம்.
இதற்கேற்ப கேப்டன் சங்ககரா, சிறப்பான வழி நடத்தலை தொடர வேண்டும். ஷிகர் தவான் சிறப்பான துவக்கம் தந்தாலும், இவருக்கு பார்த்திவ் படேல் நல்ல "கம்பெனி தரவேண்டும். கிறிஸ்டியன், ஒயிட் போன்ற சர்வதேச அனுபவம் வாய்ந்தவர்கள் இருப்பது சற்று ஆறுதல் தான்.
ஸ்டைன் நம்பிக்கை:
டெக்கான் அணியின் மிகப்பெரிய பலம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் தான். மும்பை அணிக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்திய இவர், இன்று துவக்கத்தில் அசத்தினால், ராஜஸ்தான் அணியை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தலாம். தவிர, அன்கீத் சர்மா, ஆனந்த் ராஜன், கிறிஸ்டியன், சுழலில் அமித் மிஸ்ரா ஆகியோர் அணிக்கு ஆறுதல் தந்தால் நல்லது.
புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ள ராஜஸ்தான் அணி, கடைசி இடத்தில் உள்ள டெக்கான் அணியை சொந்த மண்ணில் இன்று எளிதாக வீழ்த்தும் என்று நம்பப்படுகிறது.
என்ன செய்யப் போகிறது பெங்களூரு
பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், பெங்களூரு-புனே அணிகள் மோதுகின்றன.
இதுவரை பங்கேற்ற 4 போட்டியில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ். சொந்த மண்ணில் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்த இந்த அணி, இன்று என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.
ஏனெனில், துவக்கத்தில் கெய்ல் தொடர்ந்து சொதப்புகிறார். இவருக்குப் பதில் தில்ஷனுக்கு வாய்ப்பு தரலாம். மயங்க் அகர்வால் பரவாயில்லை என்றாலும், விராத் கோஹ்லி, சவுரப் திவாரி, டிவிலியர்ஸ் ஏமாற்றம் தொடர்வது அதிர்ச்சி தான்.
பவுலிங்கில் ஜாகிர் கான் அதிக விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். மற்றபடி ஸ்ரீநாத் அரவிந்த், வினய் குமாருடன், வெட்டோரி, முரளிதரன் போன்ற சீனியர்கள் இருந்தும் எதிரணிகள் அதிக ரன்கள் எடுப்பது புரியாத புதிர் தான்.
கங்குலி பலம்:
புனே அணியில் ரைடர் எழுச்சி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. தவிர, உத்தப்பா, கங்குலி, ஸ்டீவன் ஸ்மித், மாத்யூஸ் ஆகியோர் பேட்டிங்கில் அணிக்கு ஆறுதல் தருகின்றனர். பவுலிங்கில் ஆஷிஸ் நெஹ்ரா, டிண்டா, முரளி கார்த்திக் எதிரணியின் ரன்வேகத்துக்கு தடைபோடலாம். சர்ச்சைக்குரிய சாமுவேல்ஸ் இடம் பெறுவாரா என்று இன்று தான் தெரியும்.



