Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் தூள் கிளப்பியது கங்குலி அணி! * பஞ்சாப் அணியை வீழ்த்தியது

தூள் கிளப்பியது கங்குலி அணி! * பஞ்சாப் அணியை வீழ்த்தியது

புனே: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று புனேயில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே கேப்டன் கங்குலி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

புனே அணிக்கு கங்குலி நல்ல துவக்கம் தந்தார். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். இவர் 20 ரன்களுக்கு வெளியேறினார். பிரவீண் குமாரின் நேரடி "த்ரோ'வில் ஜெசி ரைடர்(8), ரன் அவுட்டானார்.

பின் உத்தப்பா, மர்லான் சாமுவேல்ஸ் இணைந்து அசத்தினர். பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், அதிவிரைவாக ரன் சேர்த்தனர். சாமுவேல்ஸ் 46 ரன்களுக்கு வெளியேறினார். <பெர்குசன்(3) ஏமாற்றினார். ஹர்மீத் சிங் பந்தில் உத்தப்பா (40) வீழ்ந்தார்.

ஸ்டீவன் அதிரடி:

போட்டியின் 18வது ஓவரை வீசிய ஹர்மீத் சிங் தொடர்ந்து இரு முறை "பீமர்'(பேட்ஸ்மேன் இடுப்புக்கு மேலே) முறையில் "நோ-பால்' வீசினார். இது, கிரிக்கெட் விதிமுறைப்படி தவறு என்பதால், இவருக்கு பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய நான்கு பந்துகளை பிபுல் சர்மா வீசினார். இதில் மூன்று பந்துகளை ஸ்டீவன் ஸ்மித் சிக்சருக்கு அனுப்ப, இந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் எடுக்கப்பட்டன. பால்க்னர் பந்தையும் சிக்சருக்கு விரட்டிய ஸ்டீவன் 25 ரன்கள் எடுத்தார். புனே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. மனிஷ் பாண்டே(12) அவுட்டாகாமல் இருந்தார்.

சொதப்பல் ஆட்டம்:

சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அபத்தமாக அமைந்தது. டிண்டா பந்தில் எல்.பி.டபிள்யு.,வில் இருந்து தப்பிய வல்தாட்டி, "கிரீசில்' நிற்க, அவசரப்பட்ட கேப்டன் கில்கிறிஸ்ட் வீணாக ஓடி வந்தார். இதையடுத்து வல்தாட்டி(1) ரன் அவுட்டாகி, தனது விக்கெட்டை தியாகம் செய்தார். சிறிது நேரத்தில் கில்கிறிஸ்டும்(6) ரன் அவுட்டானார். மன்தீப் சிங்(24), அபிஷேக் நாயர்(24), டேவிட் ஹசி(18) தாக்குப்பிடிக்கவில்லை. நெஹ்ரா ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா 16 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டும் எடுத்து, இரண்டாவது தோல்வியை பெற்றது. பிபுல் சர்மா(35), பிரவீண் குமார்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.

புதிதாக கட்டப்பட்ட சுப்ரதோ ராய் சகாரா மைதானத்தில், புனே அணி சாதித்துக் காட்டியது. ஏற்கனவே மும்பையை வென்றதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

ஆட்ட நாயகனாக சாமுவேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.