Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் கங்குலி அணிக்கு கலக்கல் வெற்றி! * மும்பை அணி பரிதாபம்

கங்குலி அணிக்கு கலக்கல் வெற்றி! * மும்பை அணி பரிதாபம்

மும்பை: ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரை கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி வெற்றியுடன் துவக்கி உள்ளது. நேற்று நடந்த போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை

இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. சொந்த மண்ணில் சோபிக்கத்தவறிய ஹர்பஜன் அணி, தோல்வி அடைந்து ஏமாற்றியது.

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில், ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கங்குலி வழிநடத்தும் புனே வாரியர்ஸ் அணியை சந்தித்தது.

சச்சின் இல்லை:

மும்பை அணியில், இடது கை விரல் காயம் காரணமாக சச்சின் இடம் பெறவில்லை."டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்பஜன், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

திணறல் துவக்கம்:

புனே அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வேகத்தில் மனீஷ் பாண்டே (0) "கிளீன்' போல்டானார். ஹர்பஜன் சுழலில் சிக்கிய கங்குலி (3) "ஸ்டம்பிங்' ஆனார். வெயின் பார்னல் (11), பெர்குசன் (12) ஏமாற்ற, புனே அணி 8.5 ஓவரில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஸ்மித் நம்பிக்கை:

பின் இணைந்த ராபின் உத்தப்பா, ஸ்டீவன் ஸ்மித் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மும்பை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த போது, போலார்டு பந்தில் உத்தப்பா (36) அவுட்டானார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் (4), புவனேஷ்வர் குமார் (2) சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்பாக ஆடிய ஸ்மித் (39) நம்பிக்கை தந்தார். பிரக்யான் ஓஜா பந்தில் சிக்சர் அடித்த முரளி கார்த்திக் (14*) ஓரளவு நம்பிக்கை அளித்தார். புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.

விக்கெட் சரிவு:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணியின் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் திணறினர். முரளி கார்த்திக் வீசிய முதல் ஓவரில் ரிச்சர்ட் லீவி "டக்-அவுட்' ஆனார். அசோக் டிண்டா வேகத்தில் அம்பதி ராயுடு (1), ரோகித் சர்மா (1) வெளியேறினர். இதனால் மும்பை அணி 2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டும் எடுத்து தடுமாறியது.

தினேஷ் ஆறுதல்:

பின் ஜேம்ஸ் பிராங்க்ளின், தினேஷ் கார்த்திக் ஜோடி நிதானமாக ஆடியது. நான்காவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த போது, முரளி கார்த்திக் சுழலில் தினேஷ் கார்த்திக் (32) சிக்கினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (0), போலார்டு (8) சோபிக்கவில்லை. பிராங்க்ளின் (32) ஆறுதல் தந்தார். கேப்டன் ஹர்பஜன் (16), மலிங்கா (5) ஏமாற்ற, மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 100 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

ஆட்ட நாயகனாக புனே அணியின் ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.