கோல்கட்டா:ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை
வெளிப்படுத்தி, சொந்த ஊரில் வெற்றியுடன் துவக்க கோல்கட்டா அணி காத்திருக்கிறது.
இந்தியாவில், ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், காம்பிர் தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, சேவக் வழிநடத்தும் டில்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்கிறது.
பலமான பேட்டிங்:
கோல்கட்டா அணியின் மிகப் பெரிய பலம், பேட்டிங் வரிசை. முதல் மூன்று தொடர்களில் கோல்கட்டா அணிக்காக விளையாடிய நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், மீண்டும் அணியில் இணைந்திருப்பது பேட்டிங்கில் வலு சேர்க்கிறது. ஏனெனில் 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக இவர், 73 பந்தில் 158 ரன்கள் எடுத்ததை மறக்க முடியாது. இவர், தென் ஆப்ரிக்க "ஆல்-ரவுண்டர்' காலிசுடன் இணைந்து அதிரடி துவக்கம் கொடுக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை அடையலாம்.
மூன்றாவது வீரராக கேப்டன் காம்பிர் களமிறங்கலாம். "மிடில்-ஆர்டரில்' உள்ளூர் வீரர் மனோஜ் திவாரி நம்பிக்கை அளிக்கலாம். பின் வரிசையில் களமிறங்கும் "சிக்சர் மன்னன்' யூசுப் பதான், இம்முறையும் வாண வேடிக்கை காட்டலாம். இவர்களுக்கு இயான் மார்கன், பிராட் ஹாடின், சாகிப் அல் ஹசன், சுக்லா, ரஜாத் பட்டியா, டசாட்டே ஆகியோர் கைகொடுக்கும் பட்சத்தில், நல்ல ஸ்கோரை பெறலாம். வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் சுனில் நரைன் அணியில் இணைந்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரட் லீ நம்பிக்கை:
கோல்கட்டா அணியின் வேகப்பந்துவீச்சில், ஆஸ்திரேலிய "வேகப்புயல்' பிரட் லீ, முதலாவது ஐ.பி.எல்., "ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய பாலாஜி ஆகியோர் நம்பிக்கை அளிக்கலாம். சுழலில் யூசுப் பதான், இக்பால் அப்துல்லா, சாகிப் அல் ஹசன் ஆகியோர் கைகொடுக்கும் பட்சத்தில், விக்கெட் வேட்டை நடத்தலாம். பவுலிங் பயிற்சியாளராக, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் இருப்பது சிறப்பம்சம்.
சேவக் எதிர்பார்ப்பு:
டில்லி அணியை பொறுத்த வரை பேட்டிங்கில், கேப்டன் சேவக் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது தேசிய அணிகளுக்காக விளையாடி வருவதால், முதல் ஒரு சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இதுதவிர, நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர், காயம் காரணமாக முழுமையாக பங்கேற்க மாட்டார். இதனால் நமன் ஓஜா, வேணுகோபால் ராவ் உள்ளிட்ட இளம் வீரர்களுடன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சேவக். "மிடில்-ஆர்டரில்' இர்பான் பதான் கைகொடுக்கலாம். புதிதாக இணைந்துள்ள வெஸ்ட் இண்டீசின் ஆன்ட்ரி ரசல், பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலமான வேகம்:
டில்லி அணியின் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது. தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கலுடன் இணைந்து இந்தியாவின் இர்பான் பதான், அஜித் அகார்கர், உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் மிரட்ட காத்திருக்கின்றனர். சுழலில் சொல்லிக் கொள்ளும்படி பவுலர்கள் கிடையாது. இருப்பினும் இளம் இந்திய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் நதீமுடன் இணைந்து தென் ஆப்ரிக்காவின் வான் டர் மெர்வி சாதிக்கலாம். இவர்களுக்கு பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்கும் பட்சத்தில், எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கலாம்.
தொடரை வெற்றியுடன் துவக்க கோல்கட்டா, டில்லி அணிகள் போராடும் என்பதால், சுவாரஸ்யமான ஆட்டத்தை இன்று எதிர்பார்க்கலாம்.
இதுவரை இவ்விரு அணிகள்...
ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஏழாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய ஆறு போட்டியில், இரு அணிகளும் தலா மூன்று வெற்றியை பதிவு செய்தன.
* கடந்த 2010ல், ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டில்லி அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டில்லிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 2010ல், பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டில்லி அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கோல்கட்டாவுக்கு எதிராக அதிகபட்ச ரன்னை பெற்றது.
* கடந்த 2008ல், ஈடன் கார்டனில் நடந்த கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில், டில்லி அணி 110 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் கோல்கட்டாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 2009ல், ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த டில்லி அணிக்கு எதிரான போட்டியில், கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டில்லிக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.
கைகொடுக்குமா ஈடன் கார்டன்
ஈடன் கார்டன் மைதானம், கோல்கட்டா அணிக்கு அவ்வளவு ராசியானதாக இல்லை. கடந்த 2008ல் இங்கு விளையாடிய ஏழு போட்டியில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது. 2010ல் இங்கு விளையாடிய ஏழு போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்றது. கடந்த முறை இங்கு விளையாடிய ஏழு போட்டியில் நான்கில் மட்டுமே வென்றது. இதுவரை இங்கு விளையாடிய 21 போட்டியில் 13 வெற்றி, 8 தோல்வியை பெற்றது.
பொதுவாக உள்ளூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ளும் பட்சத்தில், எந்த ஒரு அணியும் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கோல்கட்டா அணி, 50 சதவீத வெற்றியை தான் பெறுகிறது. இதனால் அரையிறுதிக்கு முன்னேற போராட வேண்டியுள்ளது.
சகோதரர்கள் மோதல்
இந்தியா மற்றும் பரோடா அணிகளுக்காக ஒரே அணியில் இணைந்து விளையாடிய யூசுப் பதான் (கோல்கட்டா நைட்ரைடர்ஸ்), இர்பான் பதான் (டில்லி டேர்டெவில்ஸ்), ஐ.பி.எல்., தொடரில் வெவ்வேறு அணிகளில் இடம் பெற்றுள்ளனர். இன்று நடக்கவுள்ள போட்டியில் இவர்கள் இருவரும் எதிரணியில் விளையாடுவதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
காம்பிர் காயம்
ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த பயிற்சியின் போது, பிரண்டன் மெக்கலம் எறிந்த பந்து காம்பிரின் வலது கணுக்காலில் தாக்கியது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். பந்து தாக்கிய இடத்தில் "ஐஸ்' ஒத்தடம் கொடுக்கப்பட்டது. இவரது காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், இன்று விளையாடுவதில் எவ்வித பிரச்னையும் இருக்காது என தெரிகிறது.



