Fri01302015

Last update04:38:22 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back ஜோதிடம் சின்னத்திரை வருடபலன்/ பொது குருப் பெயர்ச்சிப் பலன்கள்: 2011:::::: 8-5-2011 முதல் 17-5-2012 வரை

குருப் பெயர்ச்சிப் பலன்கள்: 2011:::::: 8-5-2011 முதல் 17-5-2012 வரை

குரு ஸ்லோகம்:

தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

நவக்கிரகங்களில் முழுச்சுபர் ஆவார் இவர். தன காரகராகவும், புத்திர காரகராகவும் இருக்கிறார். அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர். சமஸ்கிருத பாஷை பேசுபவர். சத்வ குணம் உள்ளவர். மஞ்சள் நிறத்தவர். வாதம் சம்பந்தமானவர். உடலில் சதையையும் மூளையையும் ஆள்பவர். பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை ஆள்பவர். தேவர்களுக்குக் குரு ஆவார்.

மந்திரியாகவும் விளங்குபவர். நான்கு கரங்களைக் கொண்டவர்.

வடகிழக்குத் திசை இவருக்கு உரியது. யானையை வாகனமாகக் கொண்டவர். யானைக்குக் கரும்பு கொடுப்பது நல்லது.

நீள் சதுர (செவ்வக) ஆசனம் இவருக்குப் பிடித்தமானது. இனிப்பு சுவை இவருக்குப் பிடிக்கும். இனிப்புப் பண்டங்களை இவருக்கு நைவேத்தியம் செய்து, மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் குரு அருள் பெறலாம்.

'பொன்னன்' எனப்படும் இவர் பொன்னுக்கு அதிபதி ஆவார்.

முல்லை மலர் தொடுத்து இவருக்கு அணிவித்து வணங்க, வேண்டியதை வழங்குவார்.

ஹோமம் செய்யும் இடங்களில் இவர் இருப்பார் என்பதால் ஹோமம் நடக்கும் இடங்களுக்குச் சென்று கலந்து கொண்டால் இவரது அருள் கிடைக்கும். அரசு சமித்து இவருக்கு உரியது. ஹோமத்தில் அரசு சமித்தை உபயோகிப்பதன் மூலம் இவரது அருளைப் பெறலாம்.

தட்சிணாமூர்த்தி இவருக்கு அதிதேவதை ஆவார். இவருக்கு அதிதேவதை இந்திர மருத்துவன் என்றும், பிரத்யதி தேவதை பிரம்மா என்றும் கூறப்பட்டுள்ளது.

தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதி ஆவார். இதில் தனுசு ராசியில் அதிபலம் பெறுவார்.

கடகம் உச்ச வீடு. மகரம் நீச வீடு.

அறிவு என்றால் குரு. வேதம் என்பதற்குப் பொருள் அறிவு ஆகும். வேதத்தின் வடிவம்தான் குரு ஆவார்.

புனித சிந்தனை, நன்னெறிகளைக் கடைப்பிடித்தல், தெய்வ பக்தி, வழிபாடு, மதாபிமானம், ஒழுக்கம், அறிவுக்கூர்மை, பெருந்தன்மை, சாத்திர அறிவு, புனித யாத்திரை, மட ஆதிக்கம், அமைச்சர் போன்ற உயர்பதவி, கெளரவமான உத்தியோகம், உயர் ரக வாகனம், அரசு சன்மானம், உயர் ரக ஆடை, அணிமணிகள், நீதி, நியாயம், தர்மம், ஈகை, உடல் உறுதி, உள்ளத் தெளிவு, சுபிட்சம், மகிழ்ச்சி, மலர்ச்சி, கல்வி, நன்மக்கட்பேறு ஆகியவற்றை குரு அருள்வார்.

ஒருவரது ஜாதகத்தில் குரு ஒருவர் மட்டுமே அதிகம் பலமாக இருந்தாலும் போதுமானது. அவரது கருணையால் அனைத்துத் துன்பங்களும் அகலுவதற்கு இடம் உண்டாகும்.

குருவின் பார்வை விசேடமானது. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். குரு தசை நடக்காவிட்டாலும், அவர் பார்வை பட்ட இடமும், கிரகமும் நற்பலன்களைத் தரும்.

நவக்கிரகங்களில் முழு முதல் சுபக்கிரகமான, சுபத் தன்மை நிறைந்த குருவானவர் கோசாரப்படி 8-5-2011 அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். குருவுக்கு நட்பு வீடு இது. 17-5-2012 வரை மேஷத்தில் உலவிவிட்டு அதன்பிறகு ரிஷபத்துக்கு இடம் மாறுவார்.

மேஷத்தில் குரு உலவும் இக்காலத்தில் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு சுப பலன்களைத் தருவார்.

மேஷம், ரிஷபம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்களுக்குக் கெடுபலன்களைத் தரக்கூடுமாதலால் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் குருப் பிரீதி செய்து கொள்வது நல்லது.

கடக, மகர ராசிக்காரர்களுக்கு ஓரளவு நலம் உண்டாகும்.

ஜனன கால ஜாதகப்படி இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் சுப பலன்கள் சொல்லப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்குப் பருத்தி புடவையாய்க் காய்த்தது போலாகும். சுப பலன்கள் அதிக அளவு உண்டாகும்.

கெடுபலன்கள் சொல்லப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்குச் சங்கடங்கள் குறைந்து, ஓரளவாவது நன்மைகள் உண்டாகும்.

மேலும் ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9-ஆவது நட்சத்திரங்களில் குரு உலவும்போது சுப பலன்களைத் தருவார். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் அமர்ந்து, நட்சத்திரப்படியும் சாதகமாக உலவும்போது நற்பலன்களின் அளவு கூடும். 1, 3, 6, 8, 10, 12-ஆம் இடங்களில் அமர்ந்து, நட்சத்திரப்படி சாதகமாக உலவும்போது கெடுபலன்களின் அளவு குறையும்.

கோசாரம், தசாபுக்தி, நட்சத்திரம் இம்மூன்று நிலைகளின்படி குரு பலம் சிறப்பாக அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். விசேடமான சுப பலன்களை இவர்கள் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

குரு பலம் அமையப் பெறாதவர்கள் குரு கவசம், குரு காயத்ரி, குரு மூல மந்திரம், வேத மந்திரம், ஸ்தோத்திரம், த்யான ஸ்லோகம், அஷ்டோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி, வழிபடுவது சிறப்பாகும்.

குருவுக்கு உரிய வழிபாட்டுத் தலங்கள்:

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் ஆலயம் குருவுக்குரிய வழிபாட்டு தலமாகும். இங்கு தட்சிணாமூர்த்தியே குருவாகக் காட்சி அளிக்கிறார்.

தஞ்சாவூர் அருகில் உள்ள தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலமும் குரு அருள் பெறலாம். இங்கு குருவுக்குத் தனிச் சந்நிதி உண்டு.

குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் உள்ளன்புடன் வணங்கி, அவர்களது வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலமும் குருவருள் பெறலாம்.

வேதம் படித்த அந்தணர்களை வணங்கி, அவர்களுக்கு வஸ்திரம், அன்னம், சொர்ணம் ஆகியவற்றை அளிப்பதன் மூலமும் குருவருள் கிடைக்கும்.

குரு காயத்ரி:

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.

இனி, மேஷத்தில் உலவும் குருவால் பன்னிரு ராசிக்காரர்களுக்கும் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம்.

மேஷம்: உங்கள் ஜன்ம ராசிக்கு வந்திருக்கிறார் குரு. கோசாரப்படி இது சிறப்பானதாகாது என்றாலும், குரு பாக்கியாதிபதியாகி, ஜன்ம ராசியில் அமர்ந்து 9-ஆமிடத்தைப் பார்ப்பதுடன், 5, 7-ஆம் இடங்களையும் பார்ப்பது சிறப்பாகும். இதனால் இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தரும சிந்தனை கூடும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். மக்கள் நலம் சீராகும். மக்கள் நல முன்னேற்றத்திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தவும் செய்வீர்கள். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்னைகள் விலகும். கூட்டாளிகள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். அதனால் கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காண்பதுடன் லாபமும் பெறுவீர்கள். எதிரிகளின் கரம் வலுக்குறையும். பயணம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுய பலத்தால் பொருள் திரட்டுவீர்கள். உயர் பதவியும், பொறுப்புக்களும் கிடைக்கும். நேர்மையான வழியில் பொருள் சேரும். மற்றவர்களால் போற்றப்படுவீர்கள். ஆடை, அணிமணிகள், ரத்தினங்கள் சேரும்.

குரு செவ்வாயின் வீட்டிலும், நெருப்பு ராசியிலும் இருப்பதால் கோபம் கூடும். தண்டனை தரும் அதிகாரத்தில் இருப்பவர்கள், நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், ராணுவ அதிகாரிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

குரு 12-ஆம் வீட்டோனாகி ஜன்ம ராசியில் இருப்பதால் சில இடர்ப்பாடுகளும் அவ்வப்போது ஏற்படும்.

தன் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 8-ஆமிடத்துக்கும், கேது 2-ஆமிடத்துக்கும் இடம் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபடலாகாது. பயணத்தால் சங்கடம் ஏற்படும்; பாதுகாப்பு தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு அவசியம் தேவை. நவம்பர் 15 முதல் சனி 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் சூழும். எதிரிகள் கூடுவார்கள். என்றாலும் சனியைக் குரு பார்ப்பதால் அவரால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம்.

வியாழக்கிழமைகளில் குருவுக்குப் பசும்நெய் தீபமேற்றி வழிபடவும். ராகுவுக்காக துர்கையையும், கேதுவுக்காக விநாயகரையும் வழிபடுவது அவசியமாகும்.

ரிஷபம்: இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 11-ஆமிடத்தில் உலவிக் கொண்டிருந்த குரு 12-ஆமிடம் மாறியிருக்கிறார். இது விசேடமாகாது. 8-ஆம் வீட்டோன் 12-ல் இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். மக்கள் நலம் பாதிக்கும். பொருளாதாரப் பிரச்னைகள் தலைதூக்கும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. 11-ஆம் வீட்டோன் 12-ல் இருப்பதால் மூத்த சகோதர, சகோதரிகளால் செலவுகள் ஏற்படும். காது சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

ஜாதகபலம் இல்லாதவர்களுக்குச் சோதனைகள் கூடும். அவமானப்பட நேரலாம். நெருப்பு, மின்சாரம், வெடிப்பொருள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியிடையே சலசலப்புக்கள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. குரு 12-ல் அமர்ந்து உங்கள் ராசிக்கு 4, 6, 8-ஆம் இடங்களைப் பார்ப்பதால் நிலபுலங்கள் சேரும். எதிரிகள் அடங்குவார்கள். பிரச்னைகள் குறையவே செய்யும். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். இன்சூரன்ஸ், பி.எஃப் போன்ற இனங்கள் லாபம் தரும்.

இளைய சகோதர, சகோதரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். குடும்ப நலம் சீராகவே இருக்கும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்கு 7-ஆமிடத்துக்கும் கேது ஜன்ம ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். இதுவும் சிறப்பாகாது. திடீர்க் கோபம் வரும். அலைச்சல் அதிகமாகும். பயணத்தால் அதிகம் அனுகூலமிராது. வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. நவம்பர் 15 முதல் சனி 6-ஆமிடம் மாறுவது விசேடமாகும். உங்கள் ராசிக்கு யோக காரகனாகிய சனி வலுப்பதால் எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்காமல் போகாது. சுரங்கப் பொருட்கள், கறுப்பு நிறப்பொருட்கள், விளைபொருட்கள் ஆகியவை லாபம் தரும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இடமாற்றம் நிச்சயம் உண்டாகும்.

இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில் குருப் பிரீதி அவசியம் செய்யப்பட வேண்டும். ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது. விநாயகரையும், துர்கையையும் வழிபடுவது அவசியமாகும்.

மிதுனம்: உங்கள் ஜன்ம ராசிக்கு 11-ஆமிடத்துக்கு வந்திருக்கிறார் குரு. கோசாரப்படி இது விசேடமானதாகும். 7-ஆம் வீட்டுக்கும் 10-ஆம் வீட்டுக்கும் உரிய குரு 11-ல் உலவுவதால் தொட்டது பொன் ஆகும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். நல்லவர்களும் வல்லவர்களும் உங்களுக்குக் கைகொடுத்து உதவுவார்கள். பொருள்வரவு அதிகரிக்கும்.

கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். பொன் நிறப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் சிறக்கும். மகப்பேறு பாக்கியமும், மக்களால் அனுகூலமும் உண்டாகும். தங்கம், ரத்தினம் ஆகியவற்றின் சேர்க்கை நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

எதிரிகள் அடங்குவார்கள். கூட்டுத் தொழிலில் அதிகம் லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

குரு சர ராசியில் இருப்பதால் வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வெளிநாட்டுப் பயணத்திட்டமும் கைகூடும். செவ்வாயின் வீட்டில் இருப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். 3, 5, 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால் சகோதர-சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். முயற்சி வீண்போகாது. வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கவே செய்யும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மாணவர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 6-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகும். கேது 12-ஆமிடத்துக்கு மாறுவது விசேடமாகாது. 6-ல் உலவும் ராகுவால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். செல்வ நிலை பெருகும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். நவம்பர் 15 முதல் சனி 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும், சனியைக் குரு பார்க்கும் நிலை ஏற்படுவதால் சனியால் விளையக்கூடிய சங்கடங்கள் குறையவே செய்யும். சனி 8-ஆம் வீட்டோன் என்கிற முறையில் சங்கடத்தை கொடுத்தாலும், 9-ஆம் வீட்டோன் என்ற முறையில் அவர் தன் உச்ச ராசியில் உலவுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் உண்டுபண்ணுவார்.

பெற்றோர் நலம் சீர்பெறும். அயல்நாட்டுத் தொடர்பால் அதிகம் பயன் உண்டாகும்.

இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில் சுப பலன்கள் நிச்சயம் உண்டாகும். ஜாதகபலமும் கூடியிருக்குமானால் இரட்டிப்பு நற்பலன்கள் உண்டாகும்.

கடகம்: உங்கள் ராசிக்கு 10-ஆமிடத்துக்குக் குரு வந்திருக்கிறார். 6-ஆம் வீட்டோன் குரு 10-ல் இருப்பதால் தொழில் ரீதியாகப் பிரச்னைகள், வழக்குகள் உண்டாகும். விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். பெரியவர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் எதிர்த்துப் பேசாமல் இருப்பதுடன், செய்வன திருந்தச் செய்வதும் அவசியமாகும்.

உங்களுடைய பொறுப்புக்களை மற்றவர்களிடம் ஒப்படைக்கலாகாது. கால் மூட்டு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். தொழில் அதிபர்கள் புதிய முதலீட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. 9-ஆம் வீட்டோன் குரு 10-ல் இருப்பதால் தான, தருமப்பணிகளிலும், தெய்வப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். அதன்மூலம் மன அமைதி கிடைக்கும். தந்தை நலம் சீராகும். தந்தையுடன் சேர்ந்து செய்யும் தொழிலில் வளர்ச்சி காணலாம்.

உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அதிகம் அனுகூலமிராது. குரு 10-ல் அமர்ந்து, 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பநலம் சீராகவே இருக்கும். அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும்.

ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 5-ஆமிடத்துக்கு மாறுவது குறை ஆகும். மக்கள் நலம் பாதிக்கும். கெட்ட பழக்கவழக்கங்களுக்கு இடம் தராமல் இருப்பது அவசியமாகும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும். கேது 11-ஆமிடம் மாறுவதால் மனச்சலனம் விலகி, துணிவு பிறக்கும். வேத, வேதாந்தங்களில் ஈடுபாடு உண்டாகும். த்யானம், யோகா, அறநிலையம் போன்ற துறைகளில் ஈடுபாடு உண்டாகும். நவம்பர் 15 முதல் சனி 4-ஆமிடம் மாறுவது விசேடமாகாது என்றாலும் சனியைக் குரு பார்க்கும் நிலை அமைவதால் சுகம் கூடும். சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு, விலகிவிடும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மறதியால் அவதி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்திவருவது நல்லது.

வியாழக்கிழமைதோறும் குருபகவானை வழிபடவும். சிவாலயம் செல்வது நல்லது. 5-ல் ராகு இருப்பதால் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபடவும்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு 9-ஆமிடத்துக்குக் குரு வந்திருக்கிறார். விசேடமான காலமாகும் இது. உங்கள் எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

ஆசிகளும் புரிவார்கள். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிட்டும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும்.

மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் ஆதாயம் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணத்திட்டம் கைகூடும். செயல்திறமை வெளிப்படும். குரு 9-ல் அமர்ந்து 1, 3, 5-ஆம் இடங்களைப் பார்ப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் ஆரோக்கியம் சீர்பெறும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். முயற்சி வீண்போகாது. மாணவர்களது திறமை பளிச்சிடும். குழந்தைகளால் உங்கள் மதிப்பு உயரும்.

ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 4-ஆமிடத்துக்கும் கேது 10-ஆம் இடத்துக்கும் இடம் மாறுகிறார்கள். ராகுவின் சஞ்சாரம் அனுகூலமானதாகாது. அலைச்சல் கூடும். உடல் அசதி உண்டாகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். கேது வால் ஆன்மிகத்தில் ஈடுபாடு மேலும் கூடும். ஜோதிடம், த்யானம், யோகா போன்ற இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆன்மிகவாதிகள், ரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். நவம்பர் 15 முதல் சனி 3-ஆமிடம் மாறுகிறார்.

ஏழரைச் சனி முற்றிலுமாக விலகுகிறது. இனி வெற்றி மேல் வெற்றிதான். சனியைக் குரு பார்ப்பதும் சிறப்பாகும்.

இதனால் பொதுநலப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், சுரங்கப்பணியாளர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை உருவாகும். வாழ்வில் சுபிட்சம் கூடும். செய்து வரும்
தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காண்பீர்கள். நல்லவர்களது ஆதரவும் கிடைக்கும்.

4-ல் உள்ள ராகுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வாருங்கள். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்கை அம்மனை வழிபடுவது அவசியமாகும்.

கன்னி: குரு 8-ஆமிடம் மாறியிருக்கிறார். இதனால் விசேடமான நன்மைகளை இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில் எதிர்பார்க்க இயலாது. தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படவே செய்யும். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். மறதி அதிகரிக்கும்.

வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். ஜனன ஜாதகத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் தெய்வ வழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை.

தொழில் அதிபர்கள் அகலக்கால் வைக்கலாகாது. எதிலும் ஒருமுறைக்குப்பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும்.

குறுக்கு வழிகளில் ஈடுபடலாகாது. உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

குருவின் பார்வை 12, 2, 4-ஆம் இடங்களில் பதிவதால் வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் ஜாதக பலம் உள்ள சிலருக்கு சேரும்.

தாய் நலம் சிறக்கும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 3-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களது தொடர்பால் நலம் பெறுவீர்கள். கேது 9-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். தொலைதூரப் பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. நவம்பர் 15 முதல் சனி 2-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. ஏழரைச் சனியின் கடைசி காலமிது. சனி உங்கள் ராசியாதிபதிக்கு நண் பர் என்பதாலும், தன் உச்ச ராசியில் உலவத் தொடங்குவதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும் நலம் புரிவார். பண வரவு கூடவே செய்யும்.

ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு, விலகிவிரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெறுவீர்கள்.

அஷ்டம குருவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும். 9-ல் உள்ள கேதுவுக்காக விநாயகரை வழிபடுவது நல்லது.

துலாம்: உங்கள் ராசிக்கு 6-ல் உலவிக் கொண்டிருந்த குரு 7-ஆமிடம் மாறியிருக்கிறார். கோசாரப்படி இது விசேடமான மாற்றமாகும். எதிர்ப்புக்கள் விலகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சலசலப்புக்கள் விலகும். அந்நியோன்யம் கூடும். பிரிந்தவர்கள் ஒன்று கூடவும் வாய்ப்புண்டு. கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் பங்குதாரர்களின் ஒத்துழைப்பின் மூலம் அதிகம் லாபம் பெறுவார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வும், இடமாற்றமும் சிறப்பாக அமையும். ஊதிய உயர்வும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும்.

நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில் அதிபர்கள் புதிய முதலீடு செய்து தங்கள் தொழிலை விருத்தி செய்து கொள்வார்கள். பகுதி நேர உத்தியோகம் சிலருக்கு கிடைக்கும்.

வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். குரு 7-ல் அமர்ந்து, 11, 1, 3-ஆம் இடங்களைப் பார்ப்பதால் உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். முயற்சிகளுக்கு உரிய பயன் கிடைக்கும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். பிரச்னைகள் எளிதில் தீரும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 2-ஆமிடத்துக்கும் கேது 8-ஆமிடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும்.

புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. நவம்பர் 15 முதல் சனி உங்கள் ஜன்ம ராசிக்கு இடம் மாறுகிறார். என்றாலும் அவர் உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதாலும் குருவால் பார்க்கப்படுவதாலும் நலம் புரிவார். அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் குறைவிராது. உடல்நலம் சீராகவே இருந்துவரும்.

உழைப்புக்குரிய பயன் கிடைக்கும்.

சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துவருவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.

ஏழைகளுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.

விருச்சிகம்: உங்கள் ராசிக்கு 2, 5-ஆம் இடங்களுக்கு அதிபதியான குரு 6-ஆமிடம் மாறியிருக்கிறார். இது விசேடமான மாற்றமாகாது. சில இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். பணப் பற்றாக்குறை ஏற்பட்டு, தேவைகளைச் சமாளிக்க கடன் வாங்க வேண்டிவரும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வீண் பேச்சு கூடாது. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வயிறு, கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். பெரியவர்களின் அபவாதத்துக்கு ஆளாக நேரலாம்.

மறதியால் அவதி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகளால் அதிகம் ஆதாயத்தை எதிர்பார்க்க இயலாது. குரு 6-ல் அமர்ந்து, 10, 12, 2-ஆம் இடங்களைப் பார்ப்பதால் செய்து வரும் தொழில் எதுவானாலும் அதில் வளர்ச்சி காணமுடியும். வீண் விரயங்கள் குறைந்து, சுப விரயங்கள் கூடும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய நேரலாம். குடும்பத்தில் அமைதி காண வழிபிறக்கும். பண வரவு கூடும். மென்மையான பேச்சால் நிலைமையைச் சமாளிப்பீர்கள்.

ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு உங்கள் ஜன்ம ராசிக்கும் கேது 7-ஆமிடத்துக்கும் இடம் மாறுகிறார்கள். இதுவும் விசேடமான மாற்றம் ஆகாது. அலைச்சல் கூடும். உடல்நலம் பாதிக்கும். மதிப்பு குறையும். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை குறையும். சண்டை, சச்சரவுகள் கூடும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவதன் மூலம் பிரிவினைக்கு ஆளாகாமல் தப்பலாம். கூட்டாளிகளிடம் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமல் இருக்கலாம். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபடவேண்டாம். விஷ பயம் உண்டாகும். ஜலப் பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும். நீர் நிலைகள் உள்ள இடங்களில் செல்லும்போது விழிப்புத் தேவை. நவம்பர் 15 முதல் சனி 12-ஆமிடம் மாறுகிறார். ஏழரைச் சனியின் காலம் தொடங்குகிறது. சனி குருவின் பார்வையைப் பெறுவதால் அதிகம் சங்கடமேற்படாமல் காக்கப்படுவீர்கள்.

இடமாற்றமோ, நிலைமாற்றமோ நிச்சயம் உண்டாகும். பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்க வாய்ப்பு உண்டாகும்.

குரு 6-ல் உலவுவதால் குரு பிரீதி செய்வது அவசியமாகும். ராகுவும், கேதுவும் இந்தக் குருப் பெயர்ச்சிக்காலம் முழுவதும் அனுகூலமாக உலவாததால் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. ராகுவுக்காகத் துர்கையையும், கேதுவுக்காக விநாயகரையும் வழிபடுங்கள். முடிந்தவர்கள் ஒருமுறை காளஹஸ்தி சென்று வருவது நல்லது. நவம்பர் பின்பகுதியிலிருந்து சனிப் பிரீதியும் செய்யப்பட வேண்டும்.

தனுசு: ராசிநாதன் குரு 5-ஆமிடம் மாறியிருக்கிறார். இது விசேடமானதாகும். ஐந்தாமிடம் புத்தி ஸ்தானமாகும். புத்திர ஸ்தானமும் ஆகும். ராசிக்கும் 4-ஆம் இடத்துக்கும் அதிபதியான குரு 5-ல் உலவுவதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும்.

புத்திர-புத்திரிகளால் அனுகூலம் உண்டாகும். குரு சர ராசியில் இருப்பதால் வெளிநாட்டுப் பயணத் திட்டம் ஈடேறும்.

வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாயின் ராசியில் இருப்பதால் மின்சாரம், நெருப்பு, பொறியியல், கட்டடப்பணிகள், செந்நிறப்பொருட்கள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் கிடைக்கும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். காடு, மலைகளில் சுற்றித் திரியவும் அதன் மூலம் மகிழ்ச்சி பெறவும் வாய்ப்பு உண்டாகும்.

எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். குருவின் பார்வை 9, 11 மற்றும் உங்கள் ராசிக்கு அமைவதால் தந்தையாலும், மூத்த சகோதர சகோதரிகளாலும் நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

ஜூன் 6-ம் தேதி முதல் ராகு 12-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. வீண் விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். கேது 6-ஆமிடத்துக்கு மாறுவதால் மனத்துணிவு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். நவம்பர் 15 முதல் சனி 11-ஆம் இடம் மாறி, குருவின் பார்வையைப் பெறப்போவதால் செல்வ நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். முயற்சி பயன் அளிக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். திடீர்ப் பொருள்வரவையும் பெறுவீர்கள். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மன உற்சாகம் கூடும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். மற்றவர்கள் உங்களைப் போற்றிப் புகழுவார்கள்.

ராகுவுக்காக செவ்வாய்க்கிழமை ராகு கால துர்கா பூஜை செய்யவும். திருநாகேஸ்வரம், திருக்காளஹஸ்தி ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று ராகு பிரீதி செய்யவும்.

மகரம்: 4-ஆமிடத்துக்குக் குரு வந்திருக்கிறார். கோசாரப்படி நான்காமிட குரு விசேடமானவர் ஆகமாட்டார். என்றாலும் அவரது பார்வைபடும் இடங்கள் புஷ்டி பெறும் என்பதால் 8, 10, 12-ஆமிடங்களால் விளையக்கூடிய பலன்கள் சிறப்பாக அமையும். எதிர்ப்புக்கள் குறையும். சங்கடங்கள் விலகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணமுடியும்.

மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறை இராது. வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். பழைய சொத்துக்களை விற்றுப் புதியதை வாங்கவும் வாய்ப்பு உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு நண்பர்களாவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். மக்களால் சுபச் செலவுகள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

மூத்த சகோதர, சகோதரிகளால் மனச் சலனம் ஏற்படும். அவர்களது ஆரோக்கியம் பாதிக்கும். தொலைதூரப் பயணத்தின்போது விழிப்புத் தேவை.

ஜூன் 6-ஆம் தேதி முதல் இதுவரையிலும் 12-ல் உலவிவந்த ராகு 11-ஆமிடம் மாறுகிறார். நல்ல மாற்றமிது.

வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், பயணம் சம்பந்தப்பட்ட துறைகள், தோல் பொருட்கள் ஆகியவை மூலம் ஆதாயம் கிடைக்கும். கேது 5-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. மக்கள் நலம் பாதிக்கும். மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். நவம்பர் 15 முதல் சனி 10-ஆமிடம் மாறி, உச்ச ராசியில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் செய்து வரும் தொழில் எதுவானாலும் அதில் வளர்ச்சி காண வழிபிறக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

சமுதாய நலப்பணிகளில் ஈடுபடுவீர்கள். பெயரும், புகழும் கூடும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவிச் சிறப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை சிலருக்கு உண்டாகும்.

குருப் பிரீதி செய்யவும். 5-ல் உலவும் கேதுவுக்காக விநாயகரை வழிபடவும்.

கும்பம்: உங்கள் ராசிக்கு 2, 11-ஆம் இடங்களுக்குரிய குரு 3-ல் உலவுவதால் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.

பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் பார்ப்பது நல்லது. நண்பர்களே கூட விரோதிகளாகும் நேரமிது என்பதால் யாரையும் நம்பி, எதிலும் கையெழுத்துப் போடக்கூடாது. ஜாமீன் கொடுக்கவும் கூடாது. ஜனன ஜாதக அடிப்படையில் தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை.

ஜாதகமும் சரியாக இல்லாதவர்களுக்குச் சோதனைகள் கூடவே செய்யும். கண்டம் ஏற்படும். உடல் நலனில் அதிகம் கவனம் தேவைப்படும். நிலபுலங்களை விற்க வேண்டிய நிலை சிலருக்கு உண்டாகும். தொழிலில் போட்டியாளர்கள் கூடுவார்கள். பொருளாதாரச் சிக்கல் உண்டாகும். 3-ல் உலவும் குரு 7, 9, 11-ஆம் இடங்களைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். தெய்வப்பணிகளிலும் தருமப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். ஆதாயம் கூடும். நல்லவர்களது நட்புறவை வளர்த்துக் கொண்டு அவர்களது ஆலோசனைகளின்படி செயல்படுவதன் மூலம் நலம் கூடப் பெறலாம்.

ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 10-ஆமிடத்துக்கு மாறுவதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். புதியவர்களது தொடர்பு பயன்படும். கேது 4-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் கூடும். சுகம் குறையும். தாய் நலம் பாதிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் அனுகூலமிராது. பூர்விகச் சொத்துக்களைப் பெற கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டிவரும். எதிலும் யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். நவம்பர் 15 முதல் இது வரையிலும் அஷ்டமத்தில் உலவிக் கொண்டிருந்த சனி பாக்கியஸ்தானமும் தன் உச்ச வீடுமான 9-ஆமிடத்துக்கு வருகிறார். குருவின் பார்வையைப் பெறுகிறார். இதனால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிரச்னைகளும், துன்பங்களும், துயரங்களும் குறையும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். குடும்ப நலம் சீர்பெறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

3-ல் உலவும் குருவுக்கு பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும். ராசிநாதன் சனி 8-ல் இருப்பதால் சனிப் பிரீதி செய்வதும் அவசியமாகும். வியாழன், சனிக்கிழமைகளில் தான, தர்மப்பணிகளில் ஈடுபடுவது நல்லது.

தட்சிணாமூர்த்தியையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் விலகும். 4-ல் உள்ள கேதுவுக்காக விநாயகரையும் வழிபடவும்.

மீனம்: ராசிநாதன் குரு 2-ஆமிடத்தில் உலவுவது விசேடமாகும். இதனால் உங்கள் வாக்குவன்மை கூடும். பண நடமாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். விருந்து, விழாக்களில் பங்கு கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். முக வசீகரம் கூடும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். செல்வ வளம் பெருகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் அபிவிருத்தி காணலாம். குரு 6, 8, 10-ஆம் இடங்களைப் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகிப் போவார்கள். பிரச்னைகள் எளிதில் தீரும். எதிர்பாராத பொருள் வந்து சேரும். வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும். செய்து வரும் தொழில் எதுவானாலும் அதில் சீரான வளர்ச்சியைக் காணலாம். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.

பேச்சின் மூலம் ஜீவனம் செய்பவர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கஜானாக்கள் ஆகிய பொருள் நடமாட்டமுள்ள இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தொலைதூரத் தொடர்பால் அதிகம் அனுகூலமிராது. கேது 3-ஆமிடம் மாறுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நவம்பர் 15 முதல் சனி 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் குருவின் பார்வை 8-ஆமிடத்துக்கும் சனிக்கும் இருப்பதால் அஷ்டம சனியால் சங்கடங்கள் உண்டாகாதவாறு நீங்கள் காக்கப்படுவீர்கள். வீண் விரயங்கள் குறையும். உழைப்புக்குரிய பயனைப் பெறுவீர்கள். செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும்.

9-ல் உள்ள ராகுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. துர்கையை வழிபடவும். செவ்வாய்க்கிழமை ராகு கால துர்கா பூஜை செய்வது சிறப்பாகும்.