Sun02012015

Last update04:38:04 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back ஜோதிடம் சின்னத்திரை வருடபலன்/ பொது சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சி பலன்கள்

சுப மங்களகரமான கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன்கிழமை (21-12-2011) அன்று வாக்கிய கணித பஞ்சாங்கப்படி சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் துலாம் ராசியில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார் சனி பகவான். திருக்கணித பஞ்சாங்கப்படி 15-11-2011 அன்று சனி பகவான் பெயர்ச்சி ஏற்பட்டது.

இந்த பெயர்ச்சி மூலம் சாதகமான பலன்கள் எதிர்பார்க்கலாம். எண்ணெய், இரும்பு போன்ற தளவாடங்கள் ஏற்றம் பெறும். பொருளாதாரம் மேம்படும். கம்ப்யூட்டர், அனிமேஷன், கிராபிக்ஸ் போன்ற துறைகள் ஏற்றமடையும். அரசியலில் பெரிய மாற்றங்கள் இருக்கும். இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். நீர்நிணீலைகள் நிரம்பி வழியும். பொதுவாக உச்ச பலம் பெற்ற சனீஸ்வரர் யோக பலன்களை வழங்குவார்.

 

மேஷம் : புகழ் பெருகும்

உங்கள் ராசிக்கு 10, 11க்குரிய சன¤ஸ்வரர் சப்தம ஸ்தானம் எனும் ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் உங்கள் ராசியையும், 4 மற்றும் 9-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். ஆகையால் சாதக பாதகங்கள் கலந்து இருக்கும். கன்னிப் பெண்களுக்கு தடை நீங்கி திருமணம் கூடி வரும். ஸ்திரமாக முடிவெடுப்பீர்கள். உங்கள் செயல்களால் புகழ் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. சொத்து சம்பந்தமாக ஆலோசித்து முடிவு எடுக்கவும். பணபிரச்னை, வழக்குகளால் பாதியில் நின்ற கட்டிட வேலைகள் மீண்டும் தொடங்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த இழுபறி நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய தொகை கைவந்து சேரும். நண்பர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. தாத்தா, பாட்டி மூலம் ஆதாயம் வரும். புதுமணத் தம்பதி குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிமாநில கோயில்களுக்கு சென்று வருவீர்கள். உத்யோகத்தில் அலைச்சல், இடமாற்றம் இருக்கும். அலுவலக பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். கடும் முயற்சிக்கு பிறகே எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். வேலையாட்களை அனுசரித்து போவது நன்மை தரும். கூட்டுத் தொழிலில் நிதானம் அவசியம்.

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். செவ்வாய்க்கிழமை பைரவரை வழிபடலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை தானம் தரலாம்.

ரிஷபம் : செல்வம்-செல்வாக்கு

உங்கள் ராசிக்கு 9, 10க்கு சனிபகவான் வெற்றி ஸ்தானம் எனும் ஆறாம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் 3, 8, 12-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். சனியவன் மூன்று, ஆறு, தயவு பதினொன்றில் வரும் காலம் உச்சமாக இருக்கும் என்ற சித்தர்கள் வாக்குக்கேற்ப உங்களை வாட்டி வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். உங்கள் செல்வாக்கு கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். கொடுக்கல், வாங்கலில் நல்ல சூழ்நிலை உருவாகும். வர வேண்டிய காசு வந்து சேரும். சொந்தங்களுடன் இருந்த மனவேற்றுமை மறையும். சிகிச்சையில் இருந்தவர்கள் பூரண குணமடைவார்கள். திசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு புது வீட்டுக்கு குடிபோகும் பாக்கியம் உண்டு. சிலர் நிலம், புது வாகனம் வாங்குவார்கள். மகன், மகளுக்கு தடை நீங்கி நல்ல வரன் அமையும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். கோயில் விசேஷம், திருவிழாவை முன்நின்று நடத்துவீர்கள். பிறந்த வீட்டில் இருந்து பெண்களுக்கு ஆதாயம் வரும். கல்வி வகையில் செலவு இருக்கும். பயணங்கள் அதிகரிக்கும். பயணத்தின்போது கவனம் தேவை. உத்யோகத்தில் மாற்றம் வரும். பதவி உயர்வு வரும். வியாபாரம் செழிக்கும். புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லலாம். வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை செய்து வணங்கலாம். ஏழை பெண்கள் திருமணத்துக்கு உதவலாம்.

மிதுனம் : சுப யோகம்

உங்கள் ராசிக்கு 8, 9க்குரிய சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் 2, 7, 11-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். இதுநாள் வரை நான்காம் இடத்தில் இருந்து பலவிதமான உடல் உபாதை, அலைச்சல், இடமாற்றம் தந்த சனிஸ்வரர் இந்த பெயர்ச்சி மூலம் யோகம், நிம்மதியை அருளப் போகிறார். பிள்ளைகள் திருமண விஷயமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக நல்ல முடிவு வரும். தந்தை மூலம் ஆதாயம் வரும். வழக்குகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெளியூரில் வேலை செய்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. மாமனார் உடல்நலத்தில் அக்கறை தேவை. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பேரன், பேத்திகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். புது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. உத்யோகத்தில் வேலைச்சுமை கணிசமாக குறையும். பதவி உயர்வு, உயரதிகாரி ஆதரவு உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது.

பரிகாரம்:தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். புதன்கிழமை நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவலாம்.

கடகம் : நல்ல மாற்றங்கள்

உங்கள் ராசிக்கு 7, 8க்குரிய சனிபகவான், சதுர்த்த கேந்திரமான நான்காம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் உங்கள் ராசியையும், 6, 10-ம் இடத்தையும் பார்க்கிறார். சுகஸ்தானத்தில் உச்சபலத்துடன் அமர்வதால் எதிர்பார்த்த அம்சங்கள் கூடிவரும். தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடக்கும். மகள் பிரசவ சம்பந்தமாக செலவு இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். விசாலமான வீட்டுக்கு குடிபோகும் பாக்கியம் உண்டு. மனைவி மூலம் மிகப்பெரிய யோகம் வந்து சேரும். தாய்வழி உறவுகளால் செலவு இருக்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். கல்வி வகையில் செலவுகள் இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழு கவனத்துடன் படிக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. நண்பர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நலம் தரும். மாமனார் உடல்நலத்தில் அக்கறை தேவை. அலுவலகத்தில் டென்ஷன், மனஸ்தாபம் வரலாம். எந்த செயலிலும் நிதானம் தேவை. இடமாற்றம், இலாகா மாற்றம் வரலாம். வியாபாரத்தில் இருந்த நிலையற்ற தன்மை மாறி ஸ்திரமாக நடக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வசதி படைத்த உறவினர் தக்க நேரத்தில் உதவுவார். கூட்டுத் தொழிலில் அனுசரணை அவசியம்.

பரிகாரம்: தினமும் ஓம் சக்தி, பராசக்தி என்று 108 முறை சொல்லலாம். பவுர்ணமியன்று அம்பாள் ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். நோயாளிகளுக்கு உதவிகள் வழங்கலாம்.

சிம்மம் : அதிர்ஷ்ட வாய்ப்புகள்

உங்கள் ராசிக்கு 6, 7க்குரிய சனிபகவான் திட தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் 5, 9, 12ம் இடங்களையும் பார்க்கிறார். கடந்த ஏழரை ஆண்டுகளாக ஏழரைச்சனியாக இருந்து பலன் தந்தவர் தற்போது ராஜ யோக பலன்களை வழங்க உள்ளார். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தந்தையுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துகளில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும். வழக்குகளில் தடை, அலைச்சல், தேவையற்ற செலவு நீங்கி நல்ல முடிவு வரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு தித்திக்கும் செய்தி வரும். தடைபட்ட கட்டிட வேலை மீண்டும் தொடங்கும். கன்னிப் பெண்களின் கல்யாண கனவு நிறைவேறும். பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் சேர்க்கை உண்டு. பிள்ளைகள் கல்வி வகையில் செலவு இருக்கும். சகோதர உறவுகளால் செலவு வரலாம். கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. வீட்டில் பராமரிப்பு செலவு ஏற்படும். மாமனார் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருந்த தடைகள், சிக்கல்கள் நீங்கும். பதவி உயர்வு, புதிய சலுகைகள் தேடி வரும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியடையும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். புதிய தொழில் வாய்ப்பு தேடி வரும்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீராம், ஜெய்ராம் என்று 108 முறை சொல்லலாம். ஞாயிற்றுக்கிழமை சிவதரிசனம், பசு மாட்டுக்கு உணவளிக்கலாம். பார்வையற்றோருக்கு உதவலாம்.

கன்னி : எதிர்ப்புகள் விலகும்

உங்கள் ராசிக்கு 5, 6க்குரிய சனிபகவான் தனவாக்கு குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் 4, 8, 11ம் இடங்களை பார்க்கிறார். இந்த மாற்றம் காரணமாக ஜென்ம சனி நீங்குகிறது. நல்ல அம்சங்கள் கூடிவரும். எதிர்மறை சிந்தனைகள் விலகும். கடன் பிரச்னை குறையும். கணவன், மனைவி இடையே மனக்கசப்பு மறையும். தடைபட்ட கட்டிட வேலை மீண்டும் தொடங்கும். சொத்து விற்பது, வாங்குவது போன்றவை தங்குதடையின்றி நடைபெறும். அடுத்தவர் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புது வண்டி வாங்குவீர்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. கன்னிப் பெண்களின் டென்ஷன், சோர்வு நீங்கும். மாணவர்கள் கல்வியில் முழுத் திறமையுடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும். மாமன் வகை உறவுகளால் ஆதாயம், மகிழ்ச்சி உண்டு. உத்யோகத்தில் இருந்த மனக்கசப்பு, எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். உயர்பதவி, புதிய பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும். வியாபாரம் உச்சமடையும். பணம் புரட்டும் முயற்சி வெற்றியடையும். புதிய தொழில், கிளைகள் தொடங்குவீர்கள்.

பரிகாரம்: தினமும் ஸ்ரீரமணாய என்று 108 முறை சொல்லலாம். சனிக்கிழமை நரசிம்மரை வழிபடலாம். இல்லாதோர், இயலாதோருக்கு உதவிகள் செய்யலாம்.

துலாம் : உதவிகள் கிடைக்கும்

உங்கள் ராசிக்கு 4, 5க்குரிய சனிஸ்வரர் உங்கள் ராசியிலேயே வந்து உச்சபலம் பெற்று அமர்கிறார். மேலும் 3, 7, 10ம் இடத்தையும் பார்வை செய்கிறார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு ஏழரை சனியில், ஜென்ம சனியாகும். ஆகையால் ஏற்ற, இறக்கங்கள், சாதக, பாதகங்கள், சோம்பல், சுறுசுறுப்பு, என கலவையான பலன்கள் இருக்கும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் சேர்க்கையை குறைக்கவும். பேச்சில் கவனம் தேவை. பெண்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சகிப்புத் தன்மை அவசியம். மகன், மகள் திருமண விஷயமாக இருந்த தடை விலகும். சுப விஷயமாக பயணம், செலவு உண்டு. உயர் அதிகாரி உதவி கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். திசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு பொன், பொருள் சேர்க்கை, புது வீடு பாக்கியம் உண்டு. கார் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சகோதர உறவுகளால் செலவு இருக்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் இடம், பொருள் அறிந்து போகவும். வீண் பேச்சு குறைக்கவும். தொழில், வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். புதிய முதலீடுகளை பார்த்து செய்யவும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: அருணாசலசிவ அருணஜடா என்று தினமும் 108 முறை சொல்லலாம். வெள்ளிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றலாம். துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவலாம்.

விருச்சிகம் : நிதானம் தேவை

உங்கள் ராசிக்கு 3, 4க்குரிய சனிபகவான் விரய ஸ்தானமான 12ம் இடத்தில் வந்து அமர்கிறார். மேலும் 2, 6, 9ம் இடத்தை பார்வை செய்கிறார். இந்த சனி மாற்றம் உங்களுக்கு ஏழரை சனியின் ஆரம்ப காலமாகும். எந்த விஷயத்தையும் தீர ஆலோசித்து நிதானமாக முடிவு எடுக்கவும். அக்கம்பக்கம் இருப்பவர்கள், நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் வேண்டாம். தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துகளில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைவந்து சேரும். பழைய சொத்துக்களை விற்று புது சொத்து வாங்குவீர்கள். சகோதர உறவுகளுடன் சுமுகமாக போவது அவசியம். தாய் மூலம் திடீர் செலவுகள் ஏற்படலாம். இடமாற்றங்கள் இருக்கும். வீட்டில் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். சகோதரி திருமண விஷயமாக முக்கிய முடிவுகளும் செலவுகளும் இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உண்டு. கல்வி வகையில் செலவு, அலைச்சல் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் கூடிவரும். இடமாற்றம், வேலை நிமித்தமாக வெளியூரில் இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். பணப்புழக்கம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் செலவுகள் இருக்கும்.

பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல், அஷ்டோத்திரம் சொல்லலாம். செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானை வழிபடலாம். ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு உதவலாம்.

தனுசு : இன்ப அதிர்ச்சி

உங்கள் ராசிக்கு 2, 3க்குரிய சனிபகவான் லாப ஸ்தானமான 11ம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் உங்கள் ராசி மற்றும் 5, 8 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். 3, 6, 11 ஆகிய இடங்களில் வரும் காலம். ஏற்றங்கள் பெருகும். நல்ல மாற்றங்கள் வரும். தொட்டது துலங்கும். காரிய வெற்றி உண்டு. மனதுக்கு இனிய சம்பவங்கள் கூடிவரும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு மறையும். சகோதர உறவுகளால் லாபம் உண்டு. யோக திசை நடப்பவர்களுக்கு சொந்த வீட்டில் குடியேறும் பாக்கியம் உண்டு. வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். பிள்ளைகள் மூலம் செலவுகள் அதிகரிக்கும். கல்வி செலவு, கல்யாண செலவு, பிரசவ செலவு என சுப செலவுகளாக இருக்கும். பயணத்தின்போது கவனம் தேவை. மறதியால் கைப்பொருள் இழப்பு ஏற்படலாம். மாமியார் உடல்நலத்தில் அக்கறை அவசியம். நீண்ட நாளாக அடைபடாத கடன்கள் அடைபடும். கன்னிப் பெண்களின் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். உத்யோகத்தில் இருக்கும் மனக்குறை நீங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கொடுக்கல், வாங்கலில் சரளமான போக்கு இருக்கும். புதிய தொழில் வாய்ப்பு வரும்.

பரிகாரம்: தினமும் ஜெயகுரு ராயா என 108 முறை சொல்லலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றலாம். பசு மாட்டுக்கு உணவு வழங்கலாம்.

மகரம் : கொண்டாட்டம், குதூகலம்

உங்கள் ராசிநாதனும், தன குடும்பாதிபதியுமான சனிபகவான் பத்தாம் இடத்துக்கு பெயர்கிறார். மேலும் 4, 7, 12ம் இடங்களை பார்வை செய்கிறார். இந்த பெயர்ச்சி மூலம் உங்கள் ராசி அதிபதி உச்ச பலத்துடன் பலன் தரப்போகிறார். ராசிநாதன் பலம் அடைவதே மிகப்பெரிய யோகம். தாமதமான விஷயங்கள் கூடிவரும். மகன், மகள் திருமணத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிறந்த வீட்டில் இருந்து வரவேண்டிய பணம், சீர், சொத்து நல்ல முறையில் வந்து சேரும். விரும்பிய இடமாற்றம் வரும். கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. கணவன்-மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. சொந்தங்களால் செலவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் லயிப்பீர்கள். கோயில், குளங்களுக்கு சென்று வருவீர்கள். பழைய சொத்து, நிலத்தை விற்று புதிய சொத்துகள் வாங்குவீர்கள். பழைய கடன்கள் அடைபடும். தாய் உடல்நலத்தில் அக்கறை தேவை. பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு விலகும். உத்யோகத்தில் இடமாற்றங்கள் இருக்கும். புதிய நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகள் பலன் தரும். அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரம் தொய்வு நீங்கி உச்சமடையும். பொருளாதார பிரச்னைகள் தீரும். தொழில் மாற்றம் இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

பரிகாரம்: ராமானுஜாய நம என்று தினமும் 108 முறை சொல்லலாம். சனிக்கிழமை சிவனுக்கு அர்ச்சனை செய்து, அன்னதானம் செய்யலாம். காகம், நாய்க்கு உணவளிக்கலாம்.

கும்பம் : விருப்பங்கள் நிறைவேறும்

உங்கள் ராசி அதிபதியும், விரயாதிபதியுமான சனீஸ்வரர் பாக்யஸ்தானம் எனும் 9ம் இடத்துக்கு பெயர்ச்சியாகிறார். மேலும் 3, 6, 11ம் இடங்களை பார்வை செய்கிறார். இந்த மாற்றம் மூலம் அஷ்டம சனி நீங்கி, பாக்கிய பலம் கிடைக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். விலகி நின்ற சொந்தங்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள். மறைமுக, நேர்முக எதிர்ப்புகள் நீங்கும். தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல், வாங்கலில் சாதகமான நிலை உண்டு. தடைபட்ட கட்டிட வேலை மீண்டும் நல்லபடியாக தொடங்கும். பூர்வீக சொத்துகளில் உங்கள் பங்கு கைவந்து சேரும். தொழில், வேலை சம்பந்தமாக வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துப் போவது நல்லது. வீண் விவாதங்கள் வேண்டாம். கல்வி வகையில் செலவுகள் இருக்கும். நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி, பொன், பொருள் சேர்க்கை உண்டு. உத்யோகத்தில் தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ஏற்றம் பெறும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீசக்கர ராஜாய நம என தினமும் 108 முறை சொல்லலாம். புதன்கிழமை ஆண்டாள், அம்பாளை வழிபடலாம். கஷ்டப்படும் பெண்களுக்கு உதவலாம்.

மீனம் : அனுசரணை தேவை

உங்கள் ராசிக்கு 11, 12க்குரிய சனிபகவான் அஷ்டம ஸ்தானமாக எட்டாம் இடத்துக்கு பெயர்கிறார். மேலும் 2, 5, 10ம் இடங்களை பார்வை செய்கிறார். ஆகையால் சாதக, பாதகங்கள் கலந்து இருக்கும். அலைச்சலால் நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எதிலும் நிதானம், சகிப்புத்தன்மை தேவை. மகன், மகளால் செலவுகள் வரும். கல்வி, திருமணம் போன்ற சுபசெலவுகள் இருக்கும். நண்பர்கள் சேர்க்கையை தவிர்க்கவும். பிறர் விஷயங்களில் அளவோடு இருப்பது நலம் தரும். கடன் வாங்க நேரிடலாம். பிள்ளைகள் செயல்பாடு மனவருத்தம் தரலாம். பழைய பிரச்னைகளை கிளறாமல் இருப்பது நல்லது. வீட்டுக்கு தேவையான பர்னீச்சர், கட்டில், பீரோ போன்றவை வாங்குவீர்கள். விசாலமான வீட்டுக்கு குடிபோகும் யோகம் உள்ளது. பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். மாமியார் உடல்நலத்தில் அக்கறை தேவை. சகோதர உறவுகளிடையே நெருக்கம் கூடும். பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வருவீர்கள். உத்யோகத்தில் மனவருத்தங்கள் வரலாம். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சாதகமாக இருக்கும். வேலையாட்களை அனுசரித்து போகவும். எந்த காரியத்திலும் அகலக்கால் வைக்க வேண்டாம்.

பரிகாரம்: தினமும் காயத்ரி மந்திரம் சொல்லலாம். திங்கள்கிழமை அம்பாளை வழிபடலாம். பவுர்ணமி கிரிவலம் போகலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம்.