Sun05012016

Last updateMon, 02 May 2016 4am

Back You are here: Home

Articles

டென்னிஸ் ‘பிக்சிங்’: பெடரர் ஆவேசம்

‘‘டென்னிஸ் போட்டிகளில் ‘பிக்சிங்’ செய்வது என்பது சட்டவிரோதமானது. இதில் ஈடுபட்டவர்கள் பெயர்களை வெளியிட வேண்டும்,’’ என, பெடரர் தெரிவித்தார்.

 

கிரிக்கெட், கால்பந்து போல டென்னிசிலும் சூதாட்டம் நடப்பது குறித்து பி.பி.சி., மற்றும் பஸ்பீடு நியூஸ் செய்தி நிறுவனங்களின் புலனாய்வில் அம்பலம் ஆனது.

உலக தரவரிசையில் ‘டாப்–50’ இடத்திலுள்ள 16 வீரர்கள் இதில் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், வீரர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகவில்லை. இதுகுறித்து முன்னணி வீரர் சுவிட்சர்லாந்தின் பெடரர் கூறியது:

‘பிக்சிங்’ செய்வது தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுகியது கிடையாது. மற்றபடி இப்பிரச்னை மிகவும் சீரியசானாது, சட்ட விரோதமானது.

டென்னிசை சுத்தம் செய்யத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.  ‘பிக்சிங்’ செய்த முன்னாள் வீரர்கள் ஒரு சிலரது பெயர் தான் வெளியாகியுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களது பெயர்களையும் வெளியிட வேண்டும்.

இல்லையெனில் மீண்டும் இதைச் செய்ய முயற்சிப்பர். இவ்விஷயத்தில் அனைத்து குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சூதாட்ட வீரர்களுக்கு நெருக்கடி தரவேண்டும். இதில் ஈடுபட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து இளம் வீரர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

தரவரிசையில் பின்தங்கிய வீரர்களுக்கு ஏற்படும் நிதிப்பிரச்னைகளால் தான் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் காலங்களில் இவர்களுக்கும் அதிக பணம் கிடைக்கும் வகையில் தொடர் நடத்தப்பட்டாலும், சூதாட்டத்தை தடுக்க முடியாது. ஏனெனில் இது மனது சம்பந்தப்பட்ட பிரச்னை.

இவ்வாறு பெடரர் கூறினார். 

ஜோகோவிச்சை தொடர்ந்து...

ஜோகோவிச்சை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தனாசி கோக்கினாகிஸ், 19, என்ற வீரர் புக்கிகள் அணுகிய விஷயத்தை வெளியிட்டார். அவர் கூறுகையில்,‘‘ சமூக வலைத்தளம் வழியாக வந்து, போட்டியில் தோற்கும் படியும், இதற்கு பணம் தருவதாகவும் கூறினர்,’’ என்றார்.

மற்றொரு வீரர் அரவிந்த் பார்மர் (பிரிட்டன்) கூறுகையில், ‘‘2004ல் நெதர்லாந்து தொடர் துவங்கும் சில மணி நேரத்துக்கு முன், 2 செட்களை தோற்றால் பணம் தருவதாக புக்கிகள் கூறினர்,’’ என்றார்.