Sun01212018

Last updateMon, 22 Jan 2018 4am

Back You are here: Home

Articles

கான்பராவில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றது

கான்பராவில் இன்று நடக்கும் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே தொடரை இழந்த இந்திய அணி இப்போட்டியிலாவது வெற்றி காண வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், வரிசையாக ‘ஹாட்ரிக்’ தோல்வியை சந்தித்த இந்திய அணி, 0–3 என தொடரை இழந்தது. நான்காவது போட்டி ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் இன்று நடக்கிறது. 

வலுவான ‘பேட்டிங்’:

இந்திய அணியின் ‘பேட்டிங்’ சிறப்பாகவே உள்ளது. இத்தொடரில் இரு சதம் அடித்த ரோகித் சர்மா மீண்டும் அசத்தல் துவக்கம் தருவது உறுதி. மற்றொரு துவக்க வீரரான தவான், கடந்த போட்டியில் 91 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். இன்று இவருக்குப்பதில் மீண்டும் மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு தரலாம். நல்ல ‘பார்மில்’உள்ள கோஹ்லியின் (91, 59, 117) ரன் வேட்டை தொடர வேண்டும். ரகானேவும் தன் பங்கிற்கு விளாசுகிறார். ஜடேஜா, கேப்டன் தோனி நம்பிக்கை அளிக்கின்றனர்.

‘பவுலிங்’ மோசம்:

பவுலிங் தான் பாடாய்படுத்துகிறது. இதன் காரணமாக தான் முதல் மூன்று போட்டியில் (309, 308, 295) வலுவான இலக்கை எட்டியும் வீழ்ந்தோம். கடந்த போட்டியில், உமேஷ் (68 ரன்), பரிந்தர் (63), இஷாந்த் (53) ரன் வள்ளல்களாக திகழ்ந்தனர். இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு ஓய்வு அளித்துவிட்டு, புவனேஷ்வரை அழைக்கலாம். ‘சுழலில்’ ஜடேஜா அசத்த வேண்டும். கடந்த போட்டியில் அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது. இதனால், இன்று மீண்டும் இடம் பெறலாம். ஒட்டுமொத்த பவுலர்களும் பொறுப்புணர்ந்தால் மட்டுமே ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய முடியும்.

அசுர பலம்:

ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ‘ஒயிட்வாஷ்’ செய்ய நினைக்கிறது. பேட்டிங்கில் ஆரோன் பின்ச், ஷான் மார்ஷ் அசத்த தயாராக உள்ளனர். வார்னர் வருகை கூடுதல் பலம். இந்திய பந்துவீச்சு என்றாலே உற்சாகமாகி விடுகிறார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். கடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றியை பறித்த ‘ஆல்–ரவுண்டர்’ மேக்ஸ்வெல், பால்க்னர், பெய்லி மிரட்டலாம்.

வருகிறார் லியான்:

வேகப்பந்துவீச்சில் ரிச்சர்ட்சன், ஹேஸ்டிங்ஸ், பால்க்னர், மிட்சல் மார்ஷ் இருந்தபோதும் பெரிதாக மிரட்டவில்லை. இன்று சுழற்பந்துவீச்சாளர் லியான் வருவதால், ஸ்காட் வெளியேறுவார் எனத்தெரிகிறது.

 

மழை வருமா

போட்டி நடக்கும் கான்பரா நகரின் வானிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 34, குறைந்தபட்சம் 17 ‘டிகிரி’ செல்சியாக இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை.

முதல் முறை

கான்பரா மைதானத்தில் 2008ல் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி, இலங்கையிடம் வீழ்ந்தது. இங்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் முதல் முறையாக மோத உள்ளன.

உலக சாதனை படைக்குமா

சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக ஒரு நாள் போட்டிகளில் வெற்றி (17) பெற்ற அணிகளின் பட்டியலில், ஆஸ்திரேலியா முதலிடத்தில் (2014–16) உள்ளது. இன்றும் ஆஸ்திரேலியா வெல்லும்பட்சத்தில், அதிக வெற்றி(18) பெற்ற அணி என்ற உலக சாதனை படைக்கலாம். அடுத்த இரண்டு இடங்களில் 16 வெற்றி பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் (1986–90), இலங்கை (1996–98) அணிகள் உள்ளன.

ஆடுகளம் எப்படி

கான்பரா ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். மீண்டும் ஒரு முறை ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

தவறுகள் திருத்தப்படுமா

இந்திய அணி இயக்குனர் ரவி சாஸ்திரி கூறுகையில்,‘‘ மூன்று ஒரு நாள் போட்டியிலும் எங்களின் செயல்பாடு வருத்தப்படக்கூடிய அளவில் இல்லை. பவுலர்கள் தாங்கள் செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும். இதை செய்தால், இந்திய அணி ‘ஒயிட் வாஷ்’ ஆபத்திலிருந்து தப்பலாம்,’’ என்றார்.

சாதனை முக்கியம் அல்ல

இந்திய வீரர் விராத் கோஹ்லி கூறுகையில்,‘‘ ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டுவேன் என நினைத்தது கூட கிடையாது. எப்போதுமே, சாதனைகளை பற்றி எண்ணியதும் கிடையாது. இது கடவுளின் கருணையால்தான் நடந்தது. ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் தொடர்பாக கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக இருக்க கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன். யுவராஜ் சிங் எனது மூத்த சகோதரர் போன்றவர். கடினமான உழைப்பாளியான இவர், சிறந்த மனிதராக திகழ்கிறார். எப்போதுமே, எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். எதிர் வரும் ‘டுவென்டி–20’ தொடரில் இவருடன் விளையாட ஆர்வமாக உள்ளேன்,’’ என்றார்.