சிம்பு நடித்த குத்து படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னடத்து நடிகை ரம்யா. அதன்பிறகு தனுசுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தனது
பெயரை திவ்யா ஸ்பந்தனாஸ் என்று மாற்றிக்கொண்டவர், காங்கிரஸ் கட்சியின்பால் ஏற்பட்ட ஈர்ப்பினால் தற்போது அக்கட்சியின் கர்நாடக இளைஞர் அணியில் ஒரு தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாக அவர் மீது ஏகப்பட்ட கிசுகிசுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனால் தாங்க முடியாத கோபத்தில் இருந்து வருகிறார் நடிகை.
இதுபற்றி அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது சிறுவயசு கனவு. அதற்காக நடிகையானேன். இப்போதுவரை பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் எதிர்காலத்தில் மக்களுக்காக எதேனும் ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என்று தோன்றியபோது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். ஆனால் அப்படிப்பட்ட என்னைப்பற்றி மீடியாக்களில் தினமொரு கிசுகிசுக்கள் பரவி வருகிறது. குறிப்பாக, எனக்கு பழக்கமே இல்லாத நடிகர்களுடன் என்னை இணைத்து தவறான செய்தி பரப்புகிறார்கள். இது மீடியாக்களின் வேலை என்று சொல்ல முடியாது. நான் அரசியலுக்கு வருவதை தடுக்க யாரோ திட்டமிட்டு இதுபோன்ற செய்திகளை பரப்பி எனது இமேஜை கெடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்காக நான் அரசியல் பணிகளில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. எதிர்நீச்சல் போட்டு ஜெயித்துக்காட்டுவேன் என்று சவால் விடுகிறார் ரம்யா.


