ஜலந்தர்: ""ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியை வைத்து கேப்டன் தோனியின் திறமையை மதிப்பிட முடியாது,'' என, இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆதரவு
தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய கேப்டன் தோனி கடும் விமர்ச்சனத்திற்கு ஆளானார்.
இவருக்கு ஆதரவு அளித்து சகவீரர் ஹர்பஜன் சிங் கூறியது: வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஒரு போட்டியில் கண்ட தோல்வியை வைத்து அந்த அணியின் கேப்டனை விமர்சனம் செய்வது தவறானது. இவரது தலைமையில் தான் கடந்த ஆண்டு இந்திய அணி, உலக கோப்பை வென்று சாதித்தது. <உலகின் தலைசிறந்த கேப்டன்களில் இவரும் ஒருவர். ஒரு போட்டியில் பெற்ற தோல்வியின் அடிப்படையில் இவரது திறமை குறித்து கேள்வி எழுப்புவது சரியல்ல.
முன்னதாக இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் நிறைய போட்டிகளில் வீழ்த்தி உள்ளோம். அப்போது அந்த அணியின் கேப்டன் இவ்வாறு விமர்ச்சிக்கப்பட்டது கிடையாது. மும்பை டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, கோல்கட்டா டெஸ்டில் முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற போராடுவோம்.
"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல், <உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார். இவர், ஒரு சில போட்டிகளில் சோபிக்கத்தவறும் போது விமர்சனம் செய்யப்படுகிறார். இது முற்றிலும் தவறானது. இவர் இன்னும் நிறைய ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். கோல்கட்டா டெஸ்டில் இழந்த "பார்மை' மீட்டு திறமையை நிரூபிப்பார் என நம்புகிறேன். ஏனெனில் ஈடன் கார்டன் மைதானம் இவருக்கு ராசியானது. இப்போட்டியில் இவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.



