Sun01212018

Last updateMon, 22 Jan 2018 4am

Back You are here: Home

Articles

இன்று பொங்கல் பண்டிகை: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக மக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

கருணாநித

தைத் திங்கள் முதல் நாள். தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் நன்னாள். தமிழர் இதயமும் இல்லமும் மகிழும் இன்பத் திருநாள்.

தநதை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தி.மு..வும் பல்லாண்டு காலம் மெய்வருத்தம் பாராது - பசி நோக்காது - கண் துஞ்சாது - ஈட்டிமுனைகளாக வீசப்பட்ட சொல்லையும் கல்லையும் கூடப் புறந்தள்ளி; உழைத்து உழைத்து நாம் உருவாக்கிய தமிழரின் - தமிழகத்தின் உன்னதங்களை உருக்குலையச் செய்துள்ள உலுத்தர்களை; ஊழல் பெருச்சாளிகளை ஒழித்து மீண்டும் தமிழினம் எழுச்சிபெற 2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில், “பதர்களைத் தூற்றி நெல்மணிகளைக் குவித்து’’ வெற்றிகள் ஈட்டிட; இந்தத் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாளில் வாழ்த்துகள் கூறி, கட்சி தொண்டர்களே, கணநேரமும் வீணாக்காமல் களத்தில் உழைத்திடுவீர் என உங்கள் அண்ணன் வேண்டுகிறேன்.

ஒன்றுபட்டு உழைத்திடுவீர். ஒப்பிலா வெற்றி குவித்திடுவீர்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் உலகம் முழுவதும் பரவியிருக்கும் என் தமிழ் சொந்தங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

தமிழ், தமிழன், தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகிற்கே முன்னுதாரணமாக விளங்க நாம் நம்மை அர்ப்பணித்து பணியாற்றுவோம். உழவும், தொழிலும் உன்னதம் பெற்று உயர்குடி தமிழ் குடியாக மாற மதுபழக்கத்தை தமிழன் மண்ணில் இருந்து அகற்ற உறுதி ஏற்போம். நம் தாயகம் வாழவும், தமிழகம் ஓங்கி உயரவும் இப்பொங்கல் நன்னாளை துவக்கமாக அமைப்போம்.

இன்றைய பொங்கல் திருநாள் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு சிறிய ஏமாற்றம் தந்தாலும் நாளைய வெற்றிக்கான பிரார்த்தனை நாளாக கொண்டாடுவோம். தை பிறந்தால் வழி பிறக்க உறுதி ஏற்போம். உழைப்போம். உயர்வோம். அனைவருக்கும் மீண்டும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தமிழ் புத்தாண்டு இனிமையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தமிழக மக்களுக்கு கொண்டு வரும். ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத, கல்வி மற்றும் சுகாதாரச் செலவு இல்லாத, குடிசைகள் இல்லாத, வறுமையில்லாத, வளம் நிறைந்த, அறிவு செறிந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதல்-அமைச்சரின் தலைமையில் புதியதோர் தமிழகம் விரைவில் உருவாகப்போவது உறுதி. அதற்காக உழைக்க இந்த தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ

தமிழர்களின் பண்பாடு கலாசாரத்தின் அடையாளமாக நடைபெற்று வந்த பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிப்பது, தமிழர்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறைகூவல்களை எல்லாம் எதிர்கொள்கின்ற வகையில், ஊழல் இல்லாத, மதுவை ஒழிக்கின்ற நேர்மையான ஓர் அரசு, மக்கள் நல அரசாக மலரத் தமிழக மக்கள் உறுதி ஏற்கும் நாளாக இந்தப் பொங்கல் அமையட்டும்.

உலகம் முழுமையும் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஜயகாந்த்

பொங்கல் திருநாளில் இருந்தாவது எதிர்வரும் காலங்களில் தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி வாழவேண்டும். மக்களின் நலன் விரும்பும் நல்லாட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். வெகு விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவு, தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடனும், உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ந்து பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டும் என, எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தே.மு.தி.. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

இந்த ஆண்டு புதுப்பானையில் பால் பொங்கும்போது மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க வேண்டும். வேளாண்மை செழிக்க வேண்டும். இயற்கை அன்னை இருகரம் நீட்டி நம்மை அரவணைக்க வேண்டும். எல்லா நலனும், வளமும் தமிழ் மக்கள் பெற வேண்டும். இயற்கையும், இறைவனும் அதற்கு துணை நிற்க வேண்டும்.

இனிய பொங்கல் நாளான இன்று முதல், நாம் அனுபவித்த தொல்லைகள், துயரங்கள் மறையட்டும், மக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும், இல்லங்களில் ஒளி பரவட்டும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறட்டும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு துணை நிற்க வண்டும் என்று இந்த இனிய நாளில் இறைவனை வேண்டுகிறேன்.

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சு.திருநாவுக்கரசர்

உழைத்து களைத்த, உழவர் பெருங்குடி மக்கள் உவந்து கொண்டாடும், இனிய விழா பொங்கல் விழா. ‘தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் முதுமொழிக்கேற்ப பிறக்கின்ற இத்தை திருநாளில் அனைவரின் வாழ்விலும், வளமும், நலமும் பெருகி மக்கள் வாழ்வில் உயர்ந்து, சிறந்திட, மகிழ்வு பெருகிட அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்

தை பிறக்கிறது, வழியும் பிறக்கிறது. மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த வலி மறைந்து மோடியின் நல்லாட்சியில் நல்வழி பிறந்துள்ளது. பல துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பல திட்டங்கள் தமிழகத்திற்கும் கிடைத்திட தாமரை மலர்ந்திட வேண்டும்.

இந்த புதுப்பொங்கல் நன்னாளில் பசியில்லாத, மது இல்லாத, பஞ்சமில்லாத, லஞ்சமில்லாத புதியதோர் தமிழகம் படைப்போம். ஆம் இந்த தைப்பொங்கலில் புதியதோர் தமிழகம் படைப்போம். புதிய வாழ்க்கை தமிழருக்கு அளிப்போம். அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.வி.கே.எஸ்.இளங்கோவன்

நமது வாழ்க்கையில் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் பொங்கல் திருநாள் என்பது மகிழ்ச்சியோடு கொண்டாடுவதும், நாம் வணங்கிப் போற்றுகிற மாடுகளை வணங்குவதும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். அந்த வகையில் பல்வேறு இன்னல்களுக்கிடையே அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழர்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இயற்கையை போற்ற வேண்டும், இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்பது தான் பொங்கல் திருநாள் நமக்கு சொல்லும் செய்தியாகும். அதை மதித்து இயற்கையுடன் கலந்து வாழவும், இயற்கையை பாதுகாக்கவும் இந்த தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளால் இயற்கையின் எதிர் நடவடிக்கைகளுக்கு நாம் ஆளாகிட வேண்டிய அவல நிலைக்கு உள்ளாகியுள்ளோம். புதுப்பானையிட்டு, புது அரிசி இட்டு பொங்கலை கொண்டாடும் இந்நாளில் வினாக்களுக்கு விடை காணவும், புதியதோர் தமிழகம் படைத்திட பொங்கல் நாளில் பொங்கி எழுவோம் என்று கூறியுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா நம் பண்பாட்டுத் திருவிழா. உழைப்பின் பெருமையை, உழவின் சிறப்பை, உலகுக்கு உணர்த்தும் உவகைப் பெருவிழா. புதியதோர் விடியலையும், புத்தாக்கத்தினையும் பொங்கித் தரும் புத்தாண்டாக அமையட்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைத்தும், மனிதநேயம் மலரும் இந்நாளில் அனைவருக்கும் பொங்கலோ பொங்கல் என்ற முழக்கத்துடன் நம் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

சரத்குமார்

தமிழனுக்குரிய அடையாளங்களை நாம் என்றுமே இழந்து விடக்கூடாது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற செய்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இடையில் ஏற்பட்ட தடைகளை தகர்த்திட வேண்டும். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொல்.திருமாவளவன

கூடிவாழ்தல், கூடி உழைத்தல், கூடி மகிழ்தல் என்னும் கூட்டுறவு பண்பாட்டை கொண்டாடும் பேரினம் தமிழினம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் நன்சிறர்மார்ந்த நேய கோட்பாட்டை உலக அரங்கில் உயர்த்தி பிடிக்கும் பெருமைக்குரிய தேசிய இனம் தமிழினம். இத்தகைய பாரம்பரிய பண்பாட்டு விழ மியங்களை பிற்போக்கு சக்திகளிடம் இருந்து மீட்கவும் பாதுகாக்கவும் தைத் திருநாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் வாடிவாசலில் வந்து நிற்கும் ஜல்லிக்கட்டு காளையை இனி சட்டக்கயிறுப் போட்டு தடுக்க இயலாது. நம்பிக்கை திமிலோடு காளை பாய, அதை நம் இளையோர் அடக்க, புண் முறுவல் உவகையோடு தொடங்கட்டும் தமிழர் புத்தாண்டு. என் உயிருக்கு இனிப்பான தாய்தமிழ் உறவுகள் அனைவருக்கும், என் இனிய தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

.சி.சண்முகம்

புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் .சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் உலகிலேயே தொழிலுக்கு விழா எடுத்து, அதனை சிறப்பாக கொண்டாடுபவர்கள் தமிழர்கள் மட்டும் தான். தைப்பொங்கல் திருநாள் தமிழர்களின் உணர்வோடு கலந்த திருநாளாகும். ஆகையால் இது, ‘தமிழர் திருநாள் என்று தனிப்பெரும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. தமிழக மக்கள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய திருநாட்கள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

என்.ஆர்.தனபாலன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனத் தலைவர் டாக்டர் .சேதுராமன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்தி .சிதம்பரம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், லட்சிய திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர், கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், மக்கள் தேசிய கட்சி நிறுவனத் தலைவர் சேம.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம்.

ஐக்கிய ஜனதாதள மாநில பொதுச் செயலாளர் டி.ராஜகோபால், அம்பேத்கர் முன்னணி கழக பொதுச் செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, தென் இந்திய பொதுநல சங்க பொதுச் செயலாளர் பி.வி.ராஜன், கிறிஸ்தவ முன்னேற்றக் கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், முஸ்லிம் மக்கள் கழக தலைவர் .கே.தாஜூதீன், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் எஸ்..பொன்னுசாமி, ஜனநாயக மக்கள் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஆர்.பி.ராஜா, மதச்சார்பற்ற ஜனதாதள மாநில தலைவர் பி.முகமது இஸ்மாயில், தமிழக விழிப்புணர்வு கட்சி நிறுவனத் தலைவர் வெ.தியாகராஜன் உள்ளிட்டோரும் தமிழக மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.