Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு பொது லங்கையில் உலக கோப்பை "டுவென்டி-20 அதிரடி ஆரம்பம் * சாதிக்குமா இந்தியா

லங்கையில் உலக கோப்பை "டுவென்டி-20 அதிரடி ஆரம்பம் * சாதிக்குமா இந்தியா

கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மாறும் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கப்படும் அதிசயம் அரங்கேறலாம்.

மடமடவென விக்கெட்டுகள் சரிவதையும் காணலாம். ஒவ்வொரு போட்டியிலும், கடைசி பந்து வரை "டென்ஷன் எகிறும் என்பதால், உலக ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று முதல் அக்., 7ம் தேதி வரை நடக்கிறது. இத்தொடர் ஆசிய மண்ணில் முதன்முறையாக நடக்க உள்ளது சிறப்பம்சம். 20 நாட்கள் நடக்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா தயார்:

இம்முறை கோப்பை வெல்ல கடும் போட்டி காணப்படுகிறது. ஒருநாள் அரங்கில் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, "டுவென்டி-20 உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற தயாராக உள்ளது. போட்டிகள் நமக்கு பரிச்சயமான இலங்கை மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.

கடந்த 2007ல் முதலாவது "டுவென்டி-20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அப்போதைய அணியில் இருந்த காம்பிர், தோனி, யுவராஜ், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஹர்பஜன், சேவக், பியுஸ் சாவ்லா ஆகிய 8 பேர் இம்முறையும் இடம் பெற்றிருப்பதால் அனுபவத்திற்கு பஞ்சமில்லை.

இந்திய அணியின் மிகப் பெரும் பலம் கேப்டன் தோனி தான். இவரது புதுமையான திட்டங்கள் கைகொடுத்தால் மீண்டும் அசத்தலாம். கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜோகிந்தர் சர்மாவை வீசச் சொன்னார். இது பலன் தர, இந்தியா கோப்பை வென்றது. இது போன்ற உத்திகளை இவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். பேட்டிங், கீப்பிங்கிலும் கைகொடுப்பார்.

துவக்கத்தில் காம்பிர், சேவக் ஜோடி மிரட்டலாம். இவர்களுக்கு இடையிலான "கெமிஸ்டிரி சிறப்பாக உள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு பேட் செய்கின்றனர். "மிடில் ஆர்டரில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா உள்ளனர். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவர்கள் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். "சூப்பர் பார்மில் உள்ள கோஹ்லி தொடர்ந்து நம்பிக்கை தருகிறார்.

யுவராஜ் நம்பிக்கை:

"கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கும் திறமை படைத்த இவர், இலங்கை மண்ணிலும் அசத்துவார். இர்பான் பதான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுழலுக்கு ஏற்ற இலங்கை ஆடுகளத்தில் அஷ்வின், ஹர்பஜன், பியுஸ் சாவ்லா மிரட்டலாம். "வேகத்துக்கு ஜாகிர் கான், உமேஷ் யாதவ், தமிழக வீரர் பாலாஜி, டிண்டா உள்ளனர்.

"டுவென்டி-20 போட்டியில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பணி மகத்தானது. எனவே, சேவக், யுவராஜ், ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி போன்றவர்களும் கைகொடுக்கலாம். இந்தியா "சூப்பர்-8 சுற்றுக்கு எளிதில் முன்னேறி விடும். இதற்கு பின் கவனமாக செயல்பட்டால், கோப்பை நமதே.

கெய்ல் "புயல்:

கோப்பை வெல்லக்கூடிய மற்ற அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது. அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் அசத்தியவர்கள் என்பது பலம். கிறிஸ் கெய்ல், போலார்டு, டுவைன் பிராவோ, ஆன்ட்ரி ரசல் போன்றவர்கள் அதிரடி ஆட்டத்தில் கெட்டிக்காரர்கள். கோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த சுனில் நரைன் சுழலில் அசத்தலாம். கேப்டன் சமி தனது படையை சரியாக வழிநடத்தினால் சாதிக்க வாய்ப்பு உண்டு.

அடுத்து தென் ஆப்ரிக்க அணி. கேப்டன் டிவிலியர்ஸ், காலிஸ், டுபிளசிஸ், ரிச்சர்டு லெவி, ஆல்பி, மார்னே மார்கல், பார்னல், ஸ்டைன் என அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் ஹீரோக்களாக வலம் வந்தவர்கள். இந்த அனுபவத்தை பயன்படுத்தினால், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.

அப்ரிதி அதிரடி:

முகமது ஹபீஸ் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தானையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதிரடிக்கு அப்ரிதி, அனுபத்துக்கு ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக், புயல் வேகத்துக்கு உமர் குல், சுழல் ஜாலத்துக்கு சயீத் அஜ்மல் உள்ளனர். தவிர, உமர், கம்ரான் அக்மல் சகோதரர்களும் கைகொடுக்கலாம்.

சொந்த மண்ணில்...:

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கும் இலங்கை அணியில் அதிகளவில் இளம் வீரர்கள் இல்லாதது குறையாக உள்ளது. ஆனாலும், கேப்டன் ஜெயவர்தனா, சங்ககரா, தில்ஷன், ஏஞ்சலோ மாத்யூஸ் போன்றவர்கள் ஐ.பி.எல்., அனுபவம் பெற்றவர்கள். இவர்களுடன் "வேகப்புயல் மலிங்கா, சுழல் மாயாவி மெண்டிஸ் இருப்பதால், சொந்த மண்ணில் கோப்பை கைப்பற்ற முயற்சிக்கும்.

பீட்டர்சன் குறை:

நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் இல்லாதது பெரும் பலவீனம். கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், "சுழல் நாயகன் சுவான் ஆகியோரை தான் அதிகம் சார்ந்துள்ளது. இதனால் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் ராஸ் டெய்லர், பிரண்டன் மெக்கலம், பிராங்களின், ஜேக்கப் ஓரம் பேட்டிங்கில் அசத்தலாம். சுழலில் அச்சுறுத்த வெட்டோரி உள்ளார். கைல் மில்ஸ், பிரேஸ்வெல், சவுத்தி போன்ற பவுலர்கள் எழுச்சி கண்டால், எதிரணிகளுக்கு சிக்கல் தான்.

நிரூபிக்குமா ஆஸி.,:

"டுவென்டி-20 போட்டிக்கு லாயக்கில்லாத அணியாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது. "ரேங்கிங் பட்டியலில் கூட 9வது இடத்தில் உள்ளது. இம்முறை ஜார்ஜ் பெய்லி தலைமையில் களமிறங்கும் அணியில் வாட்சன், வார்னர், மைக்கேல், டேவிட் ஹசி சகோதரர்கள், 41 வயதான சுழல் நாயகன் பிராட் ஹாக் போன்றோர் உள்ளனர். தங்களால் "டுவென்டி-20 அரங்கில் சாதிக்க முடியும் என்பதை ஆஸ்திரேலியா நிரூபித்துக் காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இம்முறை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தக்கூடிய அணியாக அயர்லாந்து கருதப்படுகிறது. இது தவிர, வங்கதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் பெயரளவுக்கு களத்தில் உள்ளன.

கணிப்பது கடினம்:

"டுவென்டி-20 போட்டிகளில் ஒரு ஓவரில் நிலைமை தலைகீழாக மாறிவிடும். இதனால் எதையும் எளிதில் கணிக்க முடியாது. அந்த நாளில் சிறப்பாக செயல்படும் அணிக்கே வெற்றி வசப்படும். இதனை உணர்ந்து செயல்பட்டால், இந்திய அணி மீண்டும் கோப்பை வென்று வரலாறு படைக்கலாம்.

இதுவரை சாம்பியன்கள்

"டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இதுவரை மூன்று முறை நடந்துள்ளது. இதில் 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த முதலாவது தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பின், 2009ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பை வென்றது. கடந்த 2010ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ரன் வள்ளல்

ஜோகனஸ்பர்க்கில் 2007ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 28 ரன்களை உதிரிகளாக வழங்கியது. இதன்மூலம் "டுவென்டி-20 அரங்கில் அதிக உதிரி ரன்களை வழங்கிய அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதில் 23 "வைடு அடங்கும்.

* டர்பனில் 2007ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ரன்களை உதிரிகளாக வழங்கி, இரண்டாவது இடம் பிடித்தது.

* இலங்கை (22 உதிரி ரன், எதிர்-வெஸ்ட் இண்டீஸ், 2009), பாகிஸ்தான் (20 உதிரி ரன், எதிர்-இலங்கை, 2009), ஆஸ்திரேலியா (20 உதிரி ரன், எதிர்-பாகிஸ்தான், 2010) அணிகள் 20 அல்லது அதற்கு மேல் உதிரி ரன்கள் வழங்கின.

சிறந்த வெற்றி

கடந்த 2007ல் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், "டுவென்டி-20 உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது.

* இரண்டாவது இடத்தில் 2009ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா உள்ளது.

* இந்திய அணி அதிகபட்சமாக 37 ரன்கள் வித்தியாசத்தில் (எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007, டர்பன்) வெற்றி பெற்றது.

* கேப்டவுனில் 2007ல் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், "டுவென்டி-20 உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதனை அடுத்து நியூசிலாந்து (எதிர்-கென்யா, 2007), ஆஸ்திரேலியா (எதிர்-வங்கதேசம், 2007) அணிகள் தலா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்ற பெற்றன.

* இந்திய அணி அதிகபட்சமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு முறை (எதிர்-அயர்லாந்து, 2009) வெற்றி பெற்றது.

ஒரு ரன்னில் வெற்றி

லார்ட்ஸ் மைதானத்தில் 2009ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் "டுவென்டி-20 உலக கோப்பை அரங்கில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமை பெற்றது. இதேபோல 2010ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* இந்திய அணியைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு (2007) எதிராக 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* கடந்த 2010ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் "டுவென்டி-20 உலக கோப்பை அரங்கில் மிகக் குறைந்த விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமை பெற்றது. இதனை அடுத்து இங்கிலாந்து (எதிர்-நியூசிலாந்து, 2010), ஆஸ்திரேலியா (எதிர்-பாகிஸ்தான், 2010) அணிகள் தலா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.

ஜெயவர்தனா முதலிடம்

"டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையில் இலங்கையில் மகிளா ஜெயவர்தனா முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர் 18 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 615 ரன்கள் எடுத்துள்ளார்.

கெய்ல் முதல்வன்

ஜோகனஸ்பர்க் நகரில் 2007ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 117 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் "டுவென்டி-20 உலக கோப்பை அரங்கில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர இவர், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள் வரிசையிலும் முன்னிலை வகிக்கிறார்.

* இவரை அடுத்து இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101 ரன், எதிர்-தென் ஆப்ரிக்கா, 2010), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (100 ரன், எதிர்-ஜிம்பாப்வே, 2010) ஆகியோர் சதம் அடித்து, அதிக ரன் எடுத்தவர்களுக்கான பட்டியலில் "டாப்-3 வரிசையில் உள்ளனர்.

* அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் ஜெயவர்தனா (இலங்கை), ஹைடன் (ஆஸ்திரேலியா), காம்பிர் (இந்தியா), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் தலா 4 அரைசதம் அடித்துள்ளனர்.

"டக்-அவுட் சோகம்

"டுவென்டி-20 உலக கோப்பை வரலாற்றில் அதிக முறை "டக்-அவுட் ஆன பேட்ஸ்மேன்கள் வரிசையில் இலங்கையின் ஜெயசூர்யா முன்னிலை வகிக்கிறார். இவர் அதிகபட்மாக 4 முறை ரன் எதுவும் அடிக்காமல் அவுட்டானார். இவரை அடுத்து பிளட்சர் (வெஸ்ட் இண்டீஸ்), <லூக் ரைட் (இங்கிலாந்து), அப்ரிதி (பாகிஸ்தான்) ஆகியோர் தலா மூன்று முறை "டக்-அவுட் ஆனார்கள். இந்தியா சார்பில் ஆஷிஸ் நெஹ்ரா இரண்டு முறை "டக்-அவுட் ஆனார்.

"சிக்சர் மன்னன் யுவராஜ்

உலக கோப்பை (டுவென்டி-20) அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இதுவரை 11 போட்டியில் விளையாடிய கெய்ல், 27 சிக்சர் அடித்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் யுவராஜ் சிங் 16 போட்டியில் 24 சிக்சர் விளாசினார். இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (15 போட்டி), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (18 போட்டி) ஆகியோர் தலா 17 சிக்சர் அடித்துள்ளனர்.

* ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர், 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 10 சிக்சர் விளாசினார். இவரை அடுத்து இந்தியாவின் யுவராஜ் சிங் (எதிர்-இங்கிலாந்து), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (எதிர்-இந்தியா), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (எதிர்-இந்தியா) ஆகியோர் தலா 7 சிக்சர் அடித்தனர்.

தில்ஷன் "317

இதுவரை மூன்று "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடந்துள்ளது. இதில் 2007ல் ஆஸ்திரேலியாவின் ஹைடன், 2009ல் இலங்கையின் தில்ஷன், 2010ல் இலங்கையின் மகிளா ஜெயவர்தனா ஆகியோர் அதிக ரன்கள் எடுத்தனர். இவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் தில்ஷன் முன்னிலை வகிக்கிறார். இவர் 7 போட்டியில் 317 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து ஜெயவர்தனா (302 ரன்), ஹைடன் (265 ரன்) ஆகியோர் உள்ளனர்.

அப்ரிதி அபாரம்

"டுவென்டி-20 உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் பாகிஸ்தானின் அப்ரிதி முதலிடம் வகிக்கிறார். இவர், 20 போட்டியில் 27 விக்கெட் கைப்பற்றினார்.

நானஸ் "14

இதுவரை நடந்த மூன்று உலக கோப்பை தொடரில், 2007 மற்றும் 2009ல் பாகிஸ்தானின் உமர் குல், 2010ல் ஆஸ்திரேலியாவின் டிர்க் நானஸ் ஆகியோர் அதிக விக்கெட் கைப்பற்றினர். இவர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் நான்ஸ். இவர் 7 போட்டியில் 14 விக்கெட் கைப்பற்றினார். உமர் குல் 7 போட்டியில் 13 விக்கெட் (2007, 09) வீழ்த்தினார்.

இந்தியா சார்பில் 2007ல் ஆர்.பி. சிங் 7 போட்டியில் 12 விக்கெட் கைப்பற்றினார்.

சூப்பர் கீப்பர்

அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் வரிசையில் பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் முன்னிலை வகிக்கிறார். இவர், 20 போட்டியில் 21 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் (16 போட்டி, 16 விக்.,), இலங்கையின் சங்ககரா (18 போட்டி, 16 விக்.,) ஆகியோர் உள்ளனர்.

இந்தியா சார்பில் கேப்டன் தோனி 17 போட்டியில் 12 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.

டிவிலியர்ஸ் அசத்தல்

அதிக "கேட்ச் பிடித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் முதலிடம் வகிக்கிறார். இவர், 16 போட்டியில் 16 "கேட்ச் பிடித்துள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (15 போட்டி, 11 கேட்ச்), டேவிட் வார்னர் (9 போட்டி, 9 கேட்ச்), மைக்கேல் கிளார்க் (14 போட்டி, 9 கேட்ச்), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (14 போட்டி, 9 கேட்ச்), தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (16 போட்டி, 9 கேட்ச்) ஆகியோர் உள்ளனர்.

இந்தியா சார்பில் யூசுப் பதான் 11 போட்டியில் 6 கேட்ச் பிடித்துள்ளார்.

வெற்றிக் கூட்டணி

எந்த ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் இலங்கையின் ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2010ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 166 ரன்கள் சேர்த்தது. இவர்களை அடுத்து வெஸ்ட் இண்டீசின் கெய்ல்-டுவைன் ஸ்மித் ஜோடி (எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007) முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்தது.

இந்தியா சார்பில் சேவக் - காம்பிர் ஜோடி (எதிர்-இங்கிலாந்து, 2007) முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தது.

பாக்., வீரர்கள் முன்னிலை

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் பாகிஸ்தானின் கம்ரான் அக்மல், மிஸ்பா, அப்ரிதி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இவர்கள் தலா 20 போட்டியில் விளையாடினர். இவர்களை அடுத்து இலங்கையின் தில்ஷன், ஜெயசூர்யா, ஜெயவர்தனா, மலிங்கா, சங்ககரா ஆகியோர் தலா 18 போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் கேப்டன் தோனி, ஹர்பஜன் சிங் தலா 17 போட்டியில் விளையாடினர்.

தோனி முதலிடம்

அதிக போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள வீரர்கள் வரிசையில் இந்தியாவின் தோனி, இங்கிலாந்தின் கோலிங்வுட் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் தலா 17 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளனர். இவர்களை அடுத்து தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (16), இலங்கையின் சங்ககரா (13), நியூசிலாந்தின் வெட்டோரி (13) அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தனர்.

பிரட் லீ "ஹாட்ரிக்

கடந்த 2007 செப். 16ல் கேப்டவுனில் நடந்த உலக கோப்பை "சூப்பர்-8 போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக தொடர்ந்து மூன்று விக்கெட் வீழ்த்தி "ஹாட்ரிக் சாதனை படைத்தார் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ. இதன்மூலம் சர்வதேச "டுவென்டி-20 மற்றும் உலக கோப்பை (டுவென்டி-20) போட்டியில் "ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற புதிய வரலாறு படைத்தார்.

* கடந்த 2009, 2010ல் நடந்த உலக கோப்பை தொடரில் எந்த ஒரு பவுலரும் "ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றவில்லை.

* சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் இதுவரை மூன்று முறை "ஹாட்ரிக் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரட் லீ சாதனைக்கு பின், கடந்த 2009ல் கொழும்புவில் நடந்த போட்டியில் நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம், இலங்கையின் மாத்யூஸ், மலிங்கா, குலசேகரா ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். கடந்த 2010ல் ஆக்லாந்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்தின் டிம் சவுத்தி, பாகிஸ்தானின் யூனிஸ் கான், முகமது ஹபீஸ், உமர் அக்மல் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார்.

பிரேமதாசா மைதானம், கொழும்பு

"டுவென்டி-20 உலக கோப்பை தொடர், இலங்கையில் உள்ள மூன்று முக்கிய மைதானங்களில் நடக்கிறது. இதில் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானம் ஒன்று. இங்கு அதிகபட்சமாக 15 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்திய அணி பங்கேற்க உள்ள இரண்டு லீக் போட்டிகள் இங்கு தான் நடக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இங்கு தான் லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. இதுதவிர "சூப்பர்-8 சுற்று (6 போட்டி), அரையிறுதி, பைனல் என முக்கியமான போட்டிகள் இங்கு தான் நடக்க உள்ளது.

சுமார் 35 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காணும் வசதி கொண்ட இம்மைதானத்தில், இதுவரை நான்கு சர்வதேச "டுவென்டி-20 போட்டிகள் நடந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக இந்திய அணி 174 ரன்கள் (எதிர்-இலங்கை, 2009) எடுத்துள்ளது.

பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி

இலங்கையின் கண்டி நகரில் உள்ள பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் "டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான 9 போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மூன்று லீக் மற்றும் ஆறு "சூப்பர்-8 சுற்றுப் போட்டிகள் அடங்கும். பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் விளையாடும் லீக் போட்டிகள் இங்கு தான் நடக்கிறது.

சுமார் 35 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணும் வசதி கொண்ட இம்மைதானத்தில், இதுவரை மூன்று சர்வதேச "டுவென்டி-20 போட்டிகள் நடந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக இலங்கை அணி 198 ரன்கள் (எதிர்-ஆஸ்திரேலியா, 2011) எடுத்துள்ளது.

ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் மைதானம், அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டையில் உள்ள மகிந்தா ராஜபக்சே மைதானம், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்காக நவீன முறையில் கட்டப்பட்டது. "டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான மூன்று லீக் போட்டிகள் இங்கு நடத்தப்படுகிறது. இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் இங்கு தான் லீக் சுற்றில் விளையாடுகின்றன. இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதும் தொடரின் முதல் லீக் போட்டி இங்கு நடக்கிறது.

சுமார் 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காணும் வசதி கொண்ட இம்மைதானத்தில் இதுவரை இரண்டு சர்வதேச "டுவென்டி-20 போட்டிகள் நடந்துள்ளது. இங்கு அதிகபட்சமாக இலங்கை அணி 132 ரன்கள் (எதிர்-பாகிஸ்தான், 2012) எடுத்துள்ளது.

யார் சிறந்த கேப்டன்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளைப் போல "டுவென்டி-20 அரங்கிலும் வெற்றிகரமான கேப்டன்கள் உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் தோனி வெற்றிகரமான கேப்டன். ஆனால் புள்ளிவிபர கணக்கின் படி "டுவென்டி-20 போட்டிகளில் தோனியின் செயல்பாடு மோசமாகவே உள்ளது. இதுவரை இவரது தலைமையில் பங்கேற்ற 32 போட்டிகளில் 14ல் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி "டை ஆனது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், இந்தப்பட்டியலில் வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார். இவர் தலைமையில் பங்கேற்ற 7 போட்டிகளில் 5ல் வெற்றி தேடித்தந்துள்ளார். மிக மோசமாக, ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர் 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.