Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள் தூதரகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியா விரைந்தன

தூதரகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க போர்க்கப்பல்கள் லிபியா விரைந்தன

லிபியாவில் உள்ள அமெரிக்க தூதர் கொல்லப்பட்டதையடுத்து, பாதுகாப்புக்காக 2 போர்க்கப்பல்கள் மற்றும் 50 கடற்படை

வீரர்கள் லிபியா விரைந்துள்ளனர்.

 

முகமது நபியை அவமானப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் திரைப்படம் தயாரித்துள்ளார். இதைக் கண்டிக்கும் வகையில், முஸ்லிம் அமைப்பினர் லிபியாவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரம் மீது போராட்டக்காரர்கள் ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதர் ஜெ.கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் மற்றும் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இதுபோல, எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதும் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, லிபியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அந்நாட்டு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். பெங்காசியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தலைநகர் திரிபோலிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போர்க்கப்பல்கள் விரைவு: இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக யுஎஸ்எஸ் லபூன் மற்றும் யுஎஸ்எஸ் மெக்ஃபால் ஆகிய 2 போர்க்கப்பல்கள் லிபிய கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டால், அதைச் செயல்படுத்துவதற்கு வசதியாக, இந்தக் கப்பல்கள் ஏவுகணைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு போர்க் கப்பலிலும் சுமார் 300 ஊழியர்கள் உள்ளனர். இதுபோல, 50 பேர் அடங்கிய கடற்படை வீரர்களும் லிபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட தாக்குதல்: லிபியா மற்றும் எகிப்தில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்க அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அல் காய்தா தீவிரவாதிகளுக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அமெரிக்கா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தத் தாக்குதலின்போது, ஸ்டீவன்ஸின் பாதுகாவலர் பாதியிலேயே விட்டுச் சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, ஸ்டீவன்ஸ் புகை காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது பற்றி உடல்கூறு ஆய்வறிக்கையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரவும் போராட்டம்: இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் போராட்டம் பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அந்தந்த நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.