Sat05182013

Last update04:20:48 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை இரட்டையர் போட்டிக்கு முக்கியத்துவம் * சானியாவின் புதிய திட்டம்

இரட்டையர் போட்டிக்கு முக்கியத்துவம் * சானியாவின் புதிய திட்டம்

புதுடில்லி: ""இரட்டையர் பிரிவு போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக,'' இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் சானியா மிர்சா. கடந்த 2003ல் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலடி வைத்த இவர், கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு முறை (2009-ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2012-பிரெஞ்ச் ஓபன்) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். டில்லி காமன்வெல்த் போட்டியின் ஒற்றையர் (வெள்ளி) மற்றும் இரட்டையர் (வெண்கலம்) பிரிவில் பதக்கம் வென்று சாதித்தார். இதேபோல ஆசிய விளையாட்டு, ஆப்ரோ-ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.

ஆனால் இவர், ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒரு முறை கூட பதக்கம் வென்றதில்லை. பீஜிங் ஒலிம்பிக் (2008) ஒற்றையர் பிரிவில் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இரண்டாவது சுற்றோடு வெளியேறினார். சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் இரட்டையரில் முதல் சுற்றோடு வெளியேறிய இவர், கலப்பு இரட்டையரில் காலிறுதி வரை முன்னேறினார்.

எதிர்கால திட்டம் குறித்து சானியா அளித்த பிரத்யேகப் பேட்டி:

* லண்டன் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் காலிறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறதா?

ஒலிம்பிக் போன்ற முக்கியமான போட்டிகளில், எந்த ஒரு சுற்றில் தோல்வி அடைந்தாலும் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இது குறித்து கவலைப்படாமல், அடுத்த சவாலுக்கு தயாராக வேண்டும்.

* ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாததை எப்படி உணர்கிறீர்கள்?

ஆசிய விளையாட்டு உள்ளிட்ட நிறைய போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளேன். ஆனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் தாய் நாட்டுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது திருப்தி அளிக்கிறது. ஒருவேளை ஒலிம்பிக் போட்டியில் விளையாடாமல் இருந்திருந்தால், எனது டென்னிஸ் வாழ்க்கை முழுமை பெற்றிருக்காது.

* ஒலிம்பிக்கில் சாதிக்க திறமை மட்டும் போதுமா?

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அசத்தி வரும் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் இதுவரை ஒலிம்பிக் ஒற்றையரில் தங்கம் வென்றது கிடையாது. இதேபோல முன்னாள் அமெரிக்க வீரர் பீட் சாம்பிராஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது கிடையாது. எனவே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல திறமை மட்டும் போதாது சிறிது அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும்.

* வரும் 2016ல் பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பீர்களா?

இதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் முழுமையாக உள்ளது. இது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. காலம் தான் இதற்கு பதில் கூற முடியும்.

* பயசுடன் இணைந்து விளையாடியது எப்படி இருந்தது?

லியாண்டர் பயஸ் சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இரட்டையர் பிரிவு போட்டிகளில் சிறந்த அனுபவம் கொண்ட இவருடன் இணைந்து விளையாடியது மறக்க முடியாத தருணம்.

* பூபதியுடன் இணைந்து விளையாடி இருந்தால் பதக்கம் கிடைத்திருக்குமா?

காலம் கடந்து விட்டது. இதுகுறித்து பேசி பயன் ஒன்றும் இல்லை.

* யு.எஸ்., ஓபன் உள்ளிட்ட அடுத்து வரும் தொடர்களில் பூபதியுடன் இணைந்து விளையாடுவீர்களா?

இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

* ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவீர்களா?

முன்னதாக மணிக்கட்டு மற்றும் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் மூன்று முறை "ஆப்பரேஷன்' செய்துள்ளேன். ஒற்றையரில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருந்த போதிலும், உடற்தகுதியை கருத்தில் கொண்டு இரட்டையர் பிரிவு போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளேன். இதன்மூலம் நீண்ட நாட்கள் டென்னிஸ் போட்டியில் விளையாடலாம்.

இவ்வாறு சானியா கூறினார்.