விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (41). ஆஸ்திரேலியரான இவர் சுவீடனில் விக்கி லீக்ஸ் இணையதளம் நடத்தி வந்தார்.
இவர் அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தூதரக ரகசியங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால், அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு ஆளான இவர், இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் இவர்மீது சுவீடனில் செக்ஸ் புகார் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் ஆஜராக அசாஞ்சேவை அனுப்பும்படி இங்கிலாந்திடம் சுவீடன் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, அவரை சுவீடனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விசாரணைக்குப் பயந்த அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
தூரகத்தில் புகுந்து அசாஞ்சேவை கைது செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது என்று இங்கிலாந்து எச்சரித்தது. இந்நிலையில், அசாஞ்சே தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் தங்கலாம் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ பாட்டினோ தொலைக்காட்சியில் இன்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் ஈக்வடார் மற்றும் இங்கிலாந்து இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது. சாஞ்சே லண்டனிலிருந்து ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால் அங்கிருந்து அவரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஈக்வடார் கூறியுள்ளது.
அடிப்படையான ஆதாரங்களை ஆராய்ந்த பின்னரே, அவருக்கான இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் ஈக்வடார் விளக்கமளித்துள்ளது.
இதற்கிடையே இன்று காலை ஈக்வடார் தூதரகத்திற்கு அருகே கூடிய அசாஞ்சே ஆதரவாளர்கள் அசாஞ்சேவிற்கு ஆதரவாகவும், ஈக்வடார் நாட்டுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்தின் இந்த நடவடிக்கையை மிரட்டும் செயல் என்று விக்கீ லீக்ஸ் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரகங்களை பாதுகாக்கும் வியன்னா உடன்படிக்கையை இது மீறும் செயலாகும். எனவே தூதரகங்களின் புனிதத் தன்மைக்கு எதிராக லண்டன் எடுக்கும் எந்த நடவடிக்கையும் ஒருதலைபட்சமான வெட்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் விக்கி லீக்ஸ் கூறியுள்ளது.
ஆனால் அசாங்கேவை ஈகுவேடருக்கு முறைப்படி அனுப்ப இங்கிலாந்து மறுத்துவிட்டது. இந்த தகவலை இங்கிலாந்து நாட்டு வெளியுறவு செயலாளர் வில்யிம் ஹக் தெரிவித்துள்ளார்.



