Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை "சுபேதார் மேஜர்' விஜய் குமார் * ராணுவத்தில் பதவி உயர்வு

"சுபேதார் மேஜர்' விஜய் குமார் * ராணுவத்தில் பதவி உயர்வு

 

புதுடில்லி: லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்த, துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமாருக்கு, இந்திய ராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

 

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் விஜய் குமார், 26. லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் வெள்ளி வென்றார். இந்திய ராணுவத்தில் சுபேதார் அந்தஸ்தில் பணியாற்றினார். காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற போதும், ராணுவத்தில் அங்கீகாரம், பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என அதிருப்தி அடைந்தார். இதையடுத்து ராணுவத்துக்கு "குட்பை' சொல்ல போவதாக கூறினார்.

இவ்விஷயத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மேகன் கையில் எடுத்தார். விஜய் குமாருக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனிக்கு பரிந்துரைத்தார். இதனை பரிசீலனை செய்த பாதுகாப்பு அமைச்சகம், விஜய்குமாருக்கு பதவி உயர்வு வழங்க ராணுவத்தை வலியுறுத்தியது. சமீபத்தில், ராணுவ உயர் அதிகாரி ஒருவர், விஜய்குமார் தாயகம் திரும்பியதும் ரூ. 30 லட்சம் ரொக்க பரிசு மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் எனக் கூறினார்.

நேற்று டில்லியில் நடந்த பாராட்டு விழாவில், தலைமை ராணுவ தளபதி பிக்ரம் சிங், விஜய்குமாருக்கு "சுபேதார் மேஜர்' என்ற பதவி உயர்வு வழங்கி, இதற்கான "பேட்சை' அணிவித்தார். ரூ. 30 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கினார்.

பிக்ரம் சிங் கூறுகையில், ""விஜய் குமாருக்கு பதவி உயர்வு வழங்குவதில் இந்திய ராணுவம் பெருமை அடைகிறது. வரும் காலங்களில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதிக்க, இவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை கொண்ட இவர், இப்பதவிக்கு மிகவும் சரியானவர்,'' என்றார்.

விஜய் மறுப்பு

பதவி உயர்வு குறித்து "வெள்ளி நாயகன்' விஜய் குமார் கூறுகையில், ""லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதன்மூலம் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக காத்திருந்தேன். இது தாமதாமாக கிடைத்த பதவி உயர்வு. இருப்பினும் இதனை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்கிறேன். ராணுவத்தை விட்டு விலகப் போவதாக ஒருபோதும் கூறவில்லை. சில செய்தியாளர்கள் நான் கூறியதை அப்படியே மாற்றிவிட்டனர். மத்திய அமைச்சகம் பதவி உயர்வுக்கான சில விதிமுறைகளை கொண்டுள்ளது. இதன்படி பாதுகாப்பு அமைச்சகம் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றுதான் கூறினேன்,'' என்றார்.விஜய்குமார் செய்திக்கு பாக்ஸ்

பாராட்டு விழா

லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதித்த ககன் நரங் (வெண்கலம், துப்பாக்கி சுடுதல், 10 மீ., ஏர் ரைபிள்), விஜய் குமார் (வெள்ளி, துப்பாக்கி சுடுதல், 25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல்), செய்னா நேவல் (வெண்கலம், பாட்மின்டன் ஒற்றையர்), மேரி கோம் (குத்துச்சண்டை, பிளை வெயிட், 51 கி.கி.,), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம், பிரீஸ்டைல், 60 கி.கி.,), சுஷில் குமார் (மல்யுத்தம், பிரீஸ்டைல், 66 கி.கி.,) உள்ளிட்ட ஆறு பேருக்கு விளையாட்டு அமைச்சகம் சார்பில் டில்லியில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில், விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். பின் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் "இந்தியா கேட்' என்ற இடத்தில் உள்ள "அமர் ஜவான் ஜோதி' நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர்.