மும்பை: பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ராப் மீது, செக்ஸ் புகார் கொடுத்த, இந்திய "மாடல்' அழகி லீனா கபூரின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆசாத் ராப், 56. கடந்த 2000 முதல் அம்பயராக அவதாரம் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) "எலைட் பேனல்' அம்பயர் அந்தஸ்தில் உள்ளார். இவர் மீது, மும்பையை சேர்ந்த "மாடல்' அழகி லீனா கபூர், 21, செக்ஸ் புகார் கூறினார்.
இதில்,"அம்பயர் ஆசாத் ராப்புடன் ஆறு மாதம் தொடர்பு இருந்தது. என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உறுதி அளித்து, ஏமாற்றி விட்டார். தற்போது, எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். அவரை கணவர் போல கருதினேன். ஏமாற்றி விட்டார்,' என, தெரிவித்திருந்தார்.
இதை மறுத்து ஆசாத் ராப் கூறுகையில், ""லீனா கபூருடன் சேர்ந்து வெளியான படங்கள் உண்மை தான். ஆனால், அவருடன் தவறான உறவு இல்லை. 56 வயதான நான் எப்படி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளிக்க முடியும்,'' என்றார்.
மும்பை போலீஸ் துணை கமிஷனர் திகாகரிடம், லீனா கபூர் வாக்குமூலம் அளித்தார். லீனா கபூர் கூறுகையில்,""ஏற்கனவே போலீசில் எழுத்துப் பூர்வமாக புகார் செய்திருந்தேன். அதில் என்னென்ன கூறி இருந்தேனோ, அதுகுறித்து விரிவாக மீண்டும் போலீசாரிடம் எடுத்துக் கூறினேன். இதை அவர்கள் பதிவு செய்து கொண்டனர்,'' என்றார்.
சீனியர் இன்ஸ்பெக்டர் போர்ஸ் கூறுகையில்,"" இதை எந்த போலீசார் விசாரிப்பது என்பதை, கமிஷனர் திகாகர் முடிவு செய்வார்,'' என்றார்.


