சிறிலங்கா படைகளுக்குத் தொடர்ந்தும் ஆயுத தளபாட உதவிகளை பாகிஸ்தான் வழங்கி வருவதாக பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர்
லெப்.ஜெனரல் ஆசிவ் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“பாகிஸ்தான் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு இடையில் நெருக்கிய ஒத்துழைப்பு 1980களின் தொடக்கத்தில் ஆரம்பமானது.
பயிற்சி, கருவிகள், உதிரிப்பாகங்கள் என்று எமது உதவிகள் வழங்கப்பட்டன.
நாம் தனியே தளபாட உதவிகளை மட்டும் வழங்கவில்லை. விநியோக, பயிற்சி உதவிகளையும் சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கினோம்.
மென் தீவிர யுத்தம் மற்றும் சிறிலங்காவில் நடைபெற்று வந்த இராணுவ நடவடிக்கைகளை முக்கியத்துவப்படுத்தியே எமது வழங்கப்பட்டன.
சிறிலங்காவுடனான உறவுகள் போரின் போது மட்டுமன்றி அமைதிக் காலத்திலும் தொடர்கிறது.
சிறிலங்காவில் இப்போது போர் முடிந்து விட்டது, நாம் அமைதியை நோக்கிப் பணியாற்ற வேண்டியுள்ளது.
அமைதிக் காலத்தில், சிறிலங்கா இராணுவத்துக்கு தேவைகள் உள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் கூட, அமைதிக் காலங்களில் பயன்படுத்துவதற்கான கருவிகளை சிறிலங்காஅரசாங்கத்துக்கு நாம் வழங்கியுள்ளோம்.
இவற்றில் சில கருவிகள் சிறிலங்கா விமானப்படை மற்றும் கடற்படையால் பயன்படுத்தப்படுபவை.
பல்வேறு கருவிகளை நாம் வழங்கியுள்ளதாக நினைக்கிறேன்.
நான் பதவியேற்று சில வாரங்கள் தான் ஆகின்றன. என்னிடம் எல்லாத் தகவல்களும் இல்லை.
ஆனால் பல்வேறு வகையான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு. தொடர்பாடல் கருவிகளும் அவற்றில் அடங்கும். இவை பிரதானமாக அமைதிக்காலப் பயன்பாட்டுக் கருவிகள்.
பாகிஸ்தான் அடுத்த ஆண்டில் நடத்தவுள்ள அமான் 13 கடற்படைப் போர்பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.
இந்தப் பயிற்சிக்காக சிறிலங்கா ஒரு போர்க்கப்பலை அனுப்பவுள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.



