லண்டன்:குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் மேரி கோம், இங்கிலாந்து வீராங்கனை நிகோலா ஆதம்சை சந்திக்கிறார். இதில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் பட்சத்தில்
குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்யலாம்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்புடன் சென்றது இந்தியாவின் 81 பேர் கொண்ட படை. வில்வித்தை, டென்னிஸ், ஹாக்கி போன்ற எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் மோசமாக தோற்று, பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறினர். துப்பாக்கி சுடுதலில் யாரும் எதிர்பார்க்காத விஜய் குமார், வெள்ளி வென்று அசத்தினார். பாட்மின்டனில் செய்னா நேவல் வெண்கலத்துடன் திரும்பிவிட்டார். குத்துச்சண்டையில் மொத்தம் 8 பேர் களமிறங்கினர். இதில் குறைந்தது 3 பதக்கம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
குத்துச்சண்டை 81 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் சங்வானுக்கு சரியான முறையில் புள்ளி வழங்காமல் வெளியேற்றினர். விகாஷ் கிருஷ்ணன் பெற்ற வெற்றி, சில மணி நேரம் கழித்து, அமெரிக்க நெருக்கடியால் தோல்வியாக மாற்றப்பட்டது.
இங்கிலாந்து வீரருக்கு எதிராக விளையாடியதால், மனோஜ் குமார் ஆதிக்கம் செலுத்திய போதும், கடைசியில் புள்ளிகள் குறைக்கப்பட்டு தோல்வியடைந்ததாக அறிவிக்கப் பட்டார். விஜேந்தர் சிங்கும் காலிறுதியில் தோற்று வெளியேறினார்.
இதனால், இந்தியாவின் பல பதக்க வாய்ப்பு பறிபோன நிலையில், பெண்கள் குத்துச்சண்டையில் மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேறி, வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இன்றைய அரையிறுதியில் மேரி கோம், இங்கிலாந்தின் நிகோலா ஆதம்சை சந்திக்கிறார். இவர், 51 கி.கி., எடைப்பிரிவில் உலகத் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளார். ஏற்கனவே, இங்கிலாந்து வீரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று மேரி கோம், சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.
ஆண்கள் குத்துச்சண்டை "லைட் பிளைவெயிட்', 49 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் தேவேந்திரோ சிங், அயர்லாந்தின் பார்னசை எதிர்கொள்கிறார். இதில் வெல்லும் பட்சத்தில், வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்யலாம்.
டின்டு நம்பிக்கை:
தடகளத்தில் பி.டி.உஷாவின் நேரடி பயிற்சியில் தயாராகி உள்ள டின்டு லுன்கா, 800 மீ., ஓட்டத்தில் பங்கேற்கிறார். இதில் சிறப்பாக ஓடும் பட்சத்தில் ஆக., 11ல் நடக்கும் பைனலுக்கு முன்னேறலாம்.
போராடுவேன்
அரையிறுதி குறித்து மேரி கோம் கூறுகையில்,"" ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முன்னேறுவதே முதல் லட்சியமாக இருந்தது. இப்போது பதக்கத்தை வென்று அரையிறுதிக்கும் வந்து விட்டேன். இதனால், எனக்கு நெருக்கடிகள் குறைந்துள்ளது. இன்றைய போட்டியில், வெற்றி அல்லது தோல்வி என, எது நடந்தாலும், முடிந்தவரை சிறப்பாக செயல்படுவது என்ற உறுதியில் உள்ளேன்,'' என்றார்.



