லண்டன்:ஒலிம்பிக் ஹாக்கியில் தனது கடைசி லீக் போட்டியிலும், இந்திய அணி தோல்வியடைந்தது.
லண்டன் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி "பி பிரிவில் இடம் பெற்றது. நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் தென் கொரியா என, பங்கேற்ற அனைத்து லீக் போட்டியிலும் தோற்றது. நேற்று கடைசி லீக் போட்டியில் பெல்ஜியத்தை சந்தித்தது.
வழக்கம் போல மீண்டும் சொதப்பிய இந்திய அணி, முதல் பாதியில் பெல்ஜியத்தின் ஜெரோம் (15வது நிமிடம்) அடித்த கோல் காரணமாக, 0-1 என, பின்தங்கியது. இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் எழுச்சி பெறுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெல்ஜியத்தின் கேத்தியர், பூன் டாம் 47, 67வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடிக்க, இந்திய அணி மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்தது.
இதற்கு பதிலடி கொடுக்க முயற்சித்த இந்திய அணியின் வியூகங்கள் பலன் தரவில்லை. கிடைத்த இரண்டு "பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் வீணாக, இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில், தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை சந்தித்தது. வரும் 11ம் தேதி நடக்கும் 11, 12வது இடத்துக்கான போட்டியில், இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.



