கொழும்பு: இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி சதம் அடித்து தூள் கிளப்ப, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம்
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 2-1 என, முன்னிலை வகித்தது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி, கொழும்புவில் நடந்தது.
"டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா, "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல் சர்மா நீக்கப்பட்டு, ஒரு வழியாக மனோஜ் திவாரி வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில் சங்ககரா, இசுரு உதனாவுக்குப் பதில், திரிமான்னே, பிரதீப் இடம் பெற்றனர்.
"சூப்பர்' துவக்கம்:
இலங்கை அணிக்கு தில்ஷன், தரங்கா ஜோடி "சூப்பர்' துவக்கம் கொடுத்தனர். ஜாகிர் கான், இர்பான் பதான் ஓவர்களில், தில்ஷன் தலா ஒரு பவுண்டரி அடித்தார். பின் வந்த டிண்டாவையும் இவர் விட்டு வைக்கவில்லை.
மறுமுனையில், தரங்கா தன்பங்கிற்கு டிண்டா பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்து ஜாகிர் கான் ஓவர்களில் இருவரும் சேர்ந்து மூன்று பவுண்டரிகள் விளாசினர்.
சரிவு ஆரம்பம்:
முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், தில்ஷன் 42 ரன்னில் வெளியேறினார். சிறிது நேர இடைவெளியில் 27வது அரைசதம் அடித்த தரங்கா, அஷ்வின் சுழலில் சிக்கினார்.
திவாரி அபாரம்:
பின் சண்டிமால், திரிமான்னே இருவரும் இணைந்து சற்று கைகொடுத்தனர். இந்த ஜோடியை நீண்ட இடைவெளிக்குப் பின், வாய்ப்பு பெற்ற மனோஜ் திவாரி பிரித்து அனுப்பினார். இவரது சுழலில் சண்டிமால் (28) முதலில் வெளியேறினார். அடுத்து வந்த ஜெயவர்தனாவை (3), சேவக் நீடிக்கவிடவில்லை.
மீண்டும் அசத்திய திவாரி, இம்முறை மாத்யூசை (14) அவுட்டாக்கினார். தனது 8வது ஓவரில் முதல் பந்தில், வேகமாக ரன் சேர்க்க முயன்ற மெண்டிசை (17), போல்டாக்கினார். இதே ஓவரின் கடைசி பந்தில், அபாயகரமான பெரேராவை (2) அவுட்டாக்கினார். நீண்ட நேரம் நிலைத்து நின்ற திரிமான்னேவை (69 பந்து, 47 ரன்கள்), அஷ்வின் கவனித்துக் கொண்டார்.
கடைசி நேரத்தில் மலிங்கா, ஹெராத் இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். திவாரி பந்தில் மலிங்கா ஒரு சிக்சர் அடித்தார். கடைசி ஓவரில் இந்த ஜோடி 2 சிக்சர், ஒரு பவுண்டரி என அடிக்க, இலங்கை அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. ஹெராத் (17), மலிங்கா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
காம்பிர் அதிர்ச்சி:
எட்டிவிடும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த காம்பிர், முதல் ஓவரிலேயே "டக்' அவுட்டானார்.
சேவக் "அவுட்':
அடுத்து சேவக்குடன் விராத் கோஹ்லி இணைந்தார். கடந்த மூன்று போட்டிகளில் அசத்திய பெரேராவை சேவக், ஒரு "கை' பார்த்தார். இவரது பந்துகளில் அடுத்தடுத்து இரு பவுண்டரி உட்பட மொத்தம் 5 பவுண்டரிஅடித்தது மிரட்டினார் சேவக். தொடர்ந்து மாத்யூஸ் பந்தில் பவுண்டரி அடித்த சேவக் (34), கடைசியில் இவரிடமே சிக்கினார்.
கோஹ்லி அபாரம்:
அடுத்து வந்த ரோகித் சர்மா(4) மீண்டும் ஏமாற்றினார். பின் இணைந்த விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இலங்கை பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அபாரமாக ஆடிய கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 13வது சதத்தை பதிவு செய்தார். இது இலங்கைக்கு எதிராக இவரது ஐந்தாவது சதம். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரெய்னா, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.
இந்திய அணி 42.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது. கோஹ்லி (128), ரெய்னா (58) அவுட்டாகாமல் இருந்தனர். கடைசி போட்டி ஆக., 4ல் பல்லேகெலேயில் நடக்கவுள்ளது.
400வது வெற்றி
நேற்று இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, ஒருநாள் அரங்கில் தனது 400வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 808 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள இந்திய அணி 400 வெற்றி, 367 தோல்வியை பெற்றது. ஆறு போட்டிகள் "டை' ஆனது. 35 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
* இந்திய அணி, அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக 138 போட்டிகளில் விளையாடி 74 வெற்றி, 52 தோல்வியை பெற்றது. ஒரு போட்டி "டை' ஆனது. 11 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
* பாகிஸ்தான் (121 போட்டி), ஆஸ்திரேலியா (109), வெஸ்ட் இண்டீஸ் (106), நியூசிலாந்து (88), இங்கிலாந்து (81), தென் ஆப்ரிக்கா (66), ஜிம்பாப்வே (51) அணிகளுக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடி உள்ளது.
200வது சதம்
நேற்று இலங்கைக்கு எதிராக இந்திய வீரர் விராத் கோஹ்லி சதம் அடித்தார். இது, ஒருநாள் அரங்கில் இந்தியா சார்பில் பதிவு செய்யப்பட்ட 200வது சதம். அதிகபட்சமாக இந்தியா சார்பில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் 49 சதம் அடித்துள்ளார். இவரை அடுத்து கங்குலி (22 சதம்), சேவக் (15), கோஹ்லி (13), யுவராஜ் சிங் (13), டிராவிட் (12), காம்பிர் (11) ஆகியோர் அதிக சதம் அடித்துள்ளனர்.



