புதுடில்லி: ""ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே வாழ்நாள் கனவு,'' என, இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா தெரிவித்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி துவங்குகிறது. இதில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் கிருஷ்ண பூனியா பங்கேற்கிறார்.
இதுகுறித்து பூனியா கூறியது: லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. இதற்கு, மிகுந்த கவனமுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். போட்டியில் 65 மீ., தூரத்திற்கு மேல் வட்டு எறிந்தால், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. பயிற்சியின் போது 65 மீ., தூரத்திற்கு மேல் எறிந்திருப்பது அதிக நம்பிக்கை அளிக்கிறது.
பொதுவாக சர்வதேச போட்டிகளின் போது நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இதில் ஒலிம்பிக் போட்டி என்றால் சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. போட்டியில் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் போதுமானது.
வட்டு எறிதலில், "திட்டமிடல்' முக்கியமான ஒன்று. அப்போதுதான் சரியான இலக்கை அடைய முடியும். இதற்காக யோகா, தியானம் உள்ளிட்ட மனவலிமைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
வட்டு எறிதலில் சிறந்து விளங்கும் முல்லர் (ஜெர்மனி), சான்டிரா பெர்கோவிச் (குரோஷியா), ஸ்டெபானி பிரவுன் டிராப்டன் (அஎமரிக்கா) ஆகியோரது பயிற்சி முறையை "காப்பி' அடிக்க விரும்பவில்லை. ஏனெனில் இது மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்தும். எனது திறமைக்கேற்ப தயாராகி வருகிறேன்.
டில்லியில் 2010ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், என் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம். இதுகுறித்து அதிகம் சிந்திக்காமல், போட்டியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான எனது பயிற்சி முறை திருப்தி அளிக்கிறது. இந்திய விளையாட்டு ஆணையம், தடகள கூட்டமைப்பு நிறைய வசதிகளை செய்து உதவியது. வெளிநாடுகளில் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்தது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது "ரோல் மாடலாக' ஜெர்மனியின் வட்டு எறிதல் வீராங்கனை வோல்ப்காங் உள்ளார். இவர், 1976ல் நடந்த மான்ட்ரியல் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர். இதேபோல இந்திய வீராங்கனை நீலம் ஜஸ்வந்த் சிங் மிகவும் பிடிக்கும். இவர் விளையாடிய வீடியோ காட்சிகளை பார்த்து, சில நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு கிருஷ்ண பூனியா கூறினார்.



