Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு பொது சபாஷ் "நம்பர்-1' பெடரர்!* விம்பிள்டனில் 7வது பட்டம் வென்று சாதனை * இரட்டையரில் பயஸ் ஜோடி தோல்வி

சபாஷ் "நம்பர்-1' பெடரர்!* விம்பிள்டனில் 7வது பட்டம் வென்று சாதனை * இரட்டையரில் பயஸ் ஜோடி தோல்வி

 

லண்டன்: புல்தரை களமான விம்பிள்டனில் தானே மன்னன் என்பதை ரோஜர் பெடரர் மீண்டும் அழுத்தமாக நிரூபித்தார். நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி,

7வது முறையாக பட்டம் வென்று சாதித்தார்.

 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் சுவிட்சர்லாந்தின் பெடரர், 30, பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 25,மோதினர். முதல் செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய முர்ரே 6-4 என வென்று அதிர்ச்சி கொடுத்தார். இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட பெடரர் 7-5 என வென்றார்.

மழை குறுக்கீடு:

மூன்றாவது செட்டில் இருவரும் தலா ஒரு "கேம்' வென்றிருந்த நிலையில், ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. சுமார் 40 நிமிட தாமதத்துக்கு பின் "சென்டர் கோர்ட்டின்' மேற்கூரை மூடப்பட்டு மீண்டும் போட்டி நடந்தது. மூன்றாவது செட்டின் 6வது "கேம்' அனல் பறந்தது. இருவரும் விட்டுக் கொடுக்காமல் போராட, ஆட்டம் 10 முறை "டியுஸ்' வரை சென்றது. சுமார் 20 நிமிட போராட்டத்துக்கு பின் முர்ரே "சர்வீசை' பெடரர் "பிரேக்' செய்து அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றினார். நான்காவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 6-4 என வென்றார். இறுதியில் பெடரர் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 7வது முறையாக விம்பிள்டனில் கோப்பை வென்றார்.

சாம்ப்ராஸ் சமன்:

இவ்வெற்றியின் மூலம் பெடரர் (2003-07, 09, 12) விம்பிள்டனில் அதிக முறை (7) பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் (1993-95, 97-2000), பிரிட்டனின் வில்லியம் ரென்ஷா (1881-86, 89) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். 76 ஆண்டுகளுக்கு பின் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீரர் என்ற பெருமையை பெற தவறினார் முர்ரே.

---------------

17வது கிராண்ட்ஸ்லாம்

விம்பிள்டனில் கோப்பை வென்ற பெடரர், தனது 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே இவர் ஆஸ்திரேலிய ஓபன் (2004, 06-07, 2010), பிரெஞ்ச் ஓபன் (2009), யு.எஸ்., ஓபன் (2004-08) உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் தொடரில் பட்டம் வென்றார். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் (14 பட்டம்) உள்ளார்.

-------------

இனி "நம்பர்-1'

விம்பிள்டனில் கோப்பை வென்ற பெடரர், ரேங்கிங் பட்டியலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். கடைசியாக 2010ல் நடந்த விம்பிள்டன் தொடரின் காலிறுதியில் செக்குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச்சிடம் தோல்வி அடைந்த பெடரர், முதலிடத்தை இழந்தார்.

-------------

பயஸ் ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், எலினா வெஸ்னினா(ரஷ்யா) ஜோடி தோல்வி அடைந்து, கோப்பையை கோட்டைவிட்டது.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்தது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் பயஸ், வெஸ்னினா ஜோடி, அமெரிக்காவின் மைக் பிரையன், லிசா ரேமண்ட் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் திணறிய பயஸ், வெஸ்னினா ஜோடி 3-6 என இழந்தது. இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட இவர்கள், 7-5 என வென்று பதிலடி கொடுத்தனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் பரபரப்பான 3வது செட்டில் இரு ஜோடிகளும் மாறி மாறி "கேம்'களை கைப்பற்ற, ஆட்டத்தில் சூடு பிடித்தது. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பூபதியுடன் சேர்ந்து விளையாடுவது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பயஸ் ஆட்டம், கடைசி கட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இறுதியில் பயஸ், வெஸ்னினா ஜோடி 3-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து, இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் அடைந்தது. பிரையன், ரேமண்ட் ஜோடி கோப்பை வென்றது.

---------

சகோதரிகள் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள், செக்குடியரசின் ஆன்டிரியா ஹலாவாச்கோவா, லூசி ஹராடெக்கா ஜோடியை சந்தித்தது.

இதன் முதல் செட்டை 7-5 என போராடி வென்ற அமெரிக்க ஜோடி, இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தியது. இறுதியில் செரினா-வீனஸ் ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக (2000, 02, 08, 09, 12) சாம்பியன் பட்டம் வென்றது. இது, இரட்டையர் பிரிவில் இந்த ஜோடியின் 13வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் (2001, 03, 09-10), பிரெஞ்ச் ஓபன் (1999, 2010), யு.எஸ்., ஓபன் (1999, 2009) உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் தொடரில் பட்டம் வென்றது.