டானட்ஸ்க்: யூரோ கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணி, உக்ரைனை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதி
வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று டானட்ஸ்கில் நடந்த "டி பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ், உக்ரைன் அணிகள் மோதின.
மழை குறுக்கீடு:
ஆட்டம் துவங்கிய நான்காவது நிமிடத்திலேயே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 55 நிமிடங்கள் தாமதத்துக்கு பின், மீண்டும் போட்டி துவங்கியது. முதல் பாதியில் பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்திய போதும், கோல் அடிக்க முடியவில்லை. 6வது நிமிடத்தில் இந்த அணியின் பென்சிமா சுலப வாய்ப்பை கோட்டைவிட்டார். தொடர்ந்து டெபுச்சி, சமிர் நஸ்ரி அடித்த பந்துகளை, உக்ரைன் கோல்கீப்பர் பியாடோவ் துடிப்பாக தடுத்து, உள்ளூர் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். முதல் பாதி கோல் எதுவும் அடிக்கப்படாமல் முடிந்தது.
இரண்டு கோல்:
இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர்கள் பம்பரமாக சுழன்று விளையாடினர். ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் பென்சிமா கொடுத்த "பாசை பெற்ற ஜெரிமி மெனேஸ் அசத்தல் கோல் அடிக்க, 1-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து உக்ரைன் மீள்வதற்குள் இன்னொரு "இடி விழுந்தது. இம்முறை யோகான் கபாய் ஒரு கலக்கல் கோல்(56வது நிமிடம்) அடிக்க, பிரான்ஸ் 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க முடியாத உக்ரைன் அணி, சொந்த மண்ணில் ஏமாற்றம் அளித்தது. இறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது.


