விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தாண்டவம் படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக யு.டி.வி.யின் தயாரிப்பு நிர்வாகி தனஞ்செயன், லண்டனில்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தெய்வத்திருமகள் படத்திற்கு டைரக்டர் விஜய்யும், விக்ரமும் இணையும் படம் தாண்டவம். யு.டி.வி. தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஹீரோயின்களாக அனுஷ்கா, எமி ஜாக்சன், லட்சுமிராய் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது லண்டனில் முகாமிட்டுள்ளனர் தாண்டவம் படக்குழுவினர்.
இந்நிலையில் இப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக லண்டனில் பிரஸ் மீட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் தாண்டவம் படக்குழுவினர். இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் எமி ஜாக்சன், லட்சுமிராய், டைரக்டர் விஜய், யு.டி.வி., தனஞ்செயன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தனஞ்செயன், பிரிட்டனின் மழை மற்றும் குளிர் ஆகியவை எங்களை ரொம்பவே சோதித்துவிட்டது. மழையால் படப்பிடிப்புகள் பலநாள் பாதிக்கப்பட்டது. இயற்கையை எதிர்த்து போராட ரொம்பவே சிரமப்பட்டோம். இருந்தும் ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். படமும் ரொம்ப அருமையாக வந்துள்ளது. பிரிட்டனில் இதுவரை பார்த்திராத பல இடங்களில் படக்காட்சிகளை அமைத்துள்ளோம். ஆகஸ்ட் மாதத்தில் ஆடியோவை, அதனைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் படத்தையும் ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளோம் என்றார்.


