புதுடில்லி: உள்ளூர் போட்டிகளில் மாற்றம் கொண்டு வர, முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளை புதிய பரிமானத்தில் கொண்டு வர, கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி முடிவு செய்தது. இதற்காக நேற்று முன்தினம் மும்பையில் நடந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, பி.சி.சி.ஐ., செயற்குழு கமிட்டிக்கு பரிந்துரை செய்தது.
இதுகுறித்து கர்நாடகா கிரிக்கெட் சங்க தலைவர் கும்ளே கூறியது: உள்ளூர் போட்டிகளில் நிறைய மாற்றம் கொண்டுவர கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி சில சிறந்த முடிவுகளை எடுத்துள்ளது. இதில் 50 ஓவர் போட்டியில் ஒரு பவுலருக்கு 12 ஓவர் வீச அனுமதி வழங்க வேண்டும் என்ற முடிவு வரவேற்கத்தக்கது. இது, பவுலர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும். இதன்மூலம் போட்டியின் சுவாரஸ்யம் அதிகமாகும்.
கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் விருப்பத்திற்கேற்ப ரஞ்சி கோப்பை போட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த, புதிய முறையை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு அணியும் தலா 8 போட்டிகளில் விளையாடலாம். ரஞ்சி கோப்பையில் ஒரு அணி, சொந்த மண்ணில் ஒரு போட்டியிலும், எதிரணியின் ஊரில் ஒரு போட்டியில் விளையாடுவதன் மூலம், இந்திய மைதானங்கள் குறித்து நன்கு தெரிந்து கொள்ளலாம். "நாக்-அவுட்' சுற்றுப் போட்டிகளை ஐந்து நாட்கள் நடத்துவதன் மூலம், அனைத்து போட்டிகளுக்கும் முடிவு தெரிந்துவிட வாய்ப்பு உள்ளது. பழைய முறைப்படி, முதல் இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன் வித்தியாசத்தில் சில முன்னணி அணிகளின் வெற்றி வாய்ப்பு பறிபோகிறது.
உள்ளூர் போட்டிகளின் முதல் தொடராக, துலீப் கோப்பை போட்டியை நடத்த முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இளம் வீரர்கள் இத்தொடரில் பங்கேற்க முன் வருவார்கள். தவிர சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
<உள்ளூர் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன், ஆடுகளம் குறித்து ஆராய, சிறப்பு குழு நியமிக்க முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதன்மூலம் தரமான உள்ளூர் போட்டியை ரசிகர்களுக்கு வழங்கலாம்.
இவ்வாறு கும்ளே கூறினார்.



