கனடாவில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் முன்னால் கூடிய பல நூறு தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு வருகை தந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும்
எனக் கோரி கனேடிய மற்றும் பிரித்தானியக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட 140,000 தமிழ் மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், இதனால் 'சிறிலங்காவைப் புறக்கணித்து' போர்க் குற்றவாளியான ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் எனவும் கோரி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காளைக் கொம்பொன்றைக் காவியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், கனடாவிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தின் முன் நின்றவாறு 'ராஜபக்ச ஒரு போர்க் குற்றவாளி' என உரத்துக் கத்தினார்.
2009ல் சிறிலங்காவில் இடம்பெற்ற அதன் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த கால மீறல்களை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய மகராணியாரின் வைரவிழாவில் ராஜபக்ச கலந்து கொண்டதானது உண்மையில் 'எதிர் விளைவை' உண்டுபண்ணுவதாக புதனன்று ஒழுங்குபடுத்தப்பட்ட கனேடிய தமிழர்களின் தேசிய சபையின் ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
"அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவில் தற்போது தொடரப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், சிறிலங்காவை எதிர்த்து தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பொதுநலவாய அமைப்பின் தலைமையானது பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமையானது, ஏனைய பொதுநலவாய அமைப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாகவே கருதப்படுகிறது" என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கனேடிய தமிழர் தேசிய சபையின் பேச்சாளர் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தொடர்ந்தும் வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறிலங்கா அதிபர் 2016ல் மேற்கொள்ள வேண்டிய பொதுத் தேர்தலை பிற்போடுவார் எனத் தான் நம்புவதாகவும் கனேடிய தமிழர் தேசிய சபையின் ஒன்றாரியோவுக்கான தலைவர் அருள் நல்லையா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தற்போது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியில் இருப்பதால் அவரையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் எதிர்ப்பதற்கான வலுவான எதிர்க்கட்சி ஒன்று சிறிலங்காவில் இல்லை என அருள் நல்லையா சுட்டிக்காட்டினார். 'மிகப் பயங்கரமான, கொடிய செயல்கள் பல சிறிலங்காவில் தொடரப்படுகின்றன' எனவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி வழிமூலம் : Andrew Moran - International Politics Examiner



