பெங்களூரு:ஐ.பி.எல்., தொடரின் "எலிமினேட்டர் போட்டியில் கேப்டன் தோனியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. சொதப்பலாக ஆடிய மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறியது.
பெங்களூருவில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் "பிளே-ஆப் சுற்றின் இரண்டாவது போட்டியில்(எலிமினேட்டர்) சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் களமிறங்கின. "டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன், "பீல்டிங் தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
சென்னை அணி திணறல் துவக்கம் கண்டது. ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. தவால் குல்கர்னி வீசிய அடுத்த ஓவரில் மிகப் பெரும் "ஷாக் காத்திருந்தது. முதல் பந்தில் முரளி விஜய்(1) அவுட்டானார். இரண்டாவது பந்தில் ரெய்னா(0) போல்டானார். அடுத்த பந்தை குல்கர்னி "வைடாக வீச, "ஹாட்ரிக் வாய்ப்பு நழுவியது. ஹர்பஜன் தனது இரண்டாவது ஓவரை "மெய்டனாக வீச, ரன் வறட்சி ஏற்பட்டது.
அசத்தல் ஜோடி:
பின் பத்ரிநாத், மைக்கேல் ஹசி சேர்ந்து அணியை மீட்டனர். தவால் குல்கர்னி ஓவரில் பத்ரிநாத் 2 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஹர்பஜன் ஓவரில் ஹசி 2 பவுண்டரி விளாசினார். போலார்டு ஓவரில் பத்ரிநாத் 2 பவுண்டரி அடிக்க, 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 61 ரன்கள் என்ற கவுரவமான நிலையை எட்டியது. தொடர்ந்து ஹர்பஜன் ஓவரில் பத்ரிநாத் ஒரு சிக்சர், ஹசி ஒரு இமாலய சிக்சர், பவுண்டரி அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். போலார்டு பந்தில் பத்ரிநாத்(47) அவுட்டானார். பிராங்க்ளின் "வேகத்தில் ஹசி(49) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா(1) வழக்கம் போல் ஏமாற்றினார்.
அதிரடி ஆட்டம்:
கடைசி கட்டத்தில் தோனி, டுவைன் பிராவோ சேர்ந்து அதிரடியாக ஆடினர். இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 29 பந்தில் 73 ரன்கள் சேர்த்தனர். குல்கர்னி ஓவரில் "ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார் தோனி. பின் பிராங்க்ளின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து மலிங்கா, ஆர்.பி.சிங் பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டார் . மலிங்கா வீசிய போட்டியின் 19வது ஓவரில் பிராவோ 2 பவுண்டரி, தோனி ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 18 ரன்கள் எடுக்கப்பட்டன. குல்கர்னி வீசிய கடைசி ஓவரில் பிராவோ 2 சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் 2 ரன் எடுத்த தோனி அரைசதம் கடந்தார். முதல் 9 ஓவரில் 47 ரன்கள் தான் எடுக்கப்பட்டது. கடைசி 11 ஓவரில் மட்டும் 140 ரன்கள் எடுக்கப்பட்டன. சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. தோனி 51(20 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), பிராவோ 33 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
சொதப்பல் "பேட்டிங்:
கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு டுவைன் ஸ்மித் அதிரடி துவக்கம் தந்தார். ஹில்பெனாசின் முதல் ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்தார். இவரது அடுத்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்த நேரத்தில் சச்சின்(11) ரன் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. ஜகாதி சுழலில் ஸ்மித்(38) வெளியேற, நிம்மதி ஏற்பட்டது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். ஆல்பி மார்கல் "வேகத்தில் தினேஷ் கார்த்திக்(6), ரோகித் சர்மா(14) அவுட்டாகினர். அஷ்வின் வலையில் ராயுடு(11) சிக்கினார். பிராவோ பந்தில் பிராங்க்ளின்(13) வீழ்ந்தார். கேப்டன் ஹர்பஜன்(1) தாக்குப்பிடிக்கவில்லை. மலிங்கா 17 ரன்கள் எடுத்தார். பிராவோ பந்தில் போலார்டு(16) வெளியேற, மும்பை நம்பிக்கை தகர்ந்தது. மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. குல்கர்னி(10), ஆர்.பி.சிங்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை தோனி வென்றார்.
சிக்சர் "700
நேற்று ஆல்பி மார்கல் பந்தில் மும்பை அணியின் பிராங்க்ளின் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இது, இத்தொடரின் 700வது சிக்சராக அமைந்தது.
* பிராங்களின் பந்தில் தோனி தனது வழக்கமான "ஹெலிகாப்டர் ஷாட் மூலம் 112 மீ., தூரத்துக்கு ஒரு சிக்சர் அடித்தார். இது இத்தொடரின் "மெகா சிக்சராக அமைந்தது.
அதிவேக அரைசதம்
நேற்று 20 பந்தில் தோனி அரைசதம் கடந்தார். இதன் மூலம் இத்தொடரில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் டில்லி அணியின் சேவக்குடன்(20 பந்து, எதிர், ராஜஸ்தான்) இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் ராஜஸ்தான் அணியின் ஓவேஸ் ஷா(19 பந்து, எதிர், பெங்களூரு உள்ளார்). தவிர, ஐ.பி.எல்., வரலாற்றில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை தோனி பெற்றார்.
மார்கலுக்கு ரூ. 5 லட்சம்
"பவுலிங்-மெஷின் மூலம் வீசப்படும் டென்னிஸ் பந்தில் அதிக தூரத்துக்கு சிக்சர் அடிக்கும் "சூப்பர் சிக்சஸ் போட்டியில் சென்னை அணியின் ஆல்பி மார்கல் வெற்றி பெற்றார். 105 மீ., தூரத்துக்கு சிக்சர் அடித்த இவர் ரூ. 5 லட்சம் பரிசாக தட்டிச் சென்றார்.
ஹர்பஜன் "ஹெல்மெட்டில்
பிராவோ வீசிய "பவுன்சர் மும்பை கேப்டன் ஹர்பஜன் "ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. இதனால் சில வினாடிகள் நிலைதடுமாறிய இவர், விரைவாக சகஜ நிலைமைக்கு திரும்பினார். நல்லவேளை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
"நோ-பால் பிரச்னை
ஹில்பெனாஸ் பந்தில் மும்பை அணியின் போலார்டு போல்டானார். ஆனால் "நோ-பால் தொடர்பாக சந்தேகம் எழ, மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது. "ரீப்ளேயில் காலை "கிரீசுக்கு வெளியே வைத்து பந்துவீசியது உறுதி செய்யப்பட போலார்டு தப்பினார். அப்போது 13 ரன் தான் எடுத்திருந்த இவர், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அடுத்து டில்லியுடன் மோதல்
சென்னை அணி பாதி கிணறு தான் தாண்டியுள்ளது. நாளை சென்னையில் நடக்கும் "பிளே-ஆப் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் டில்லி அணியுடன் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் வரும் 27ம் தேதி நடக்கும் பைனலில் கோல்கட்டாவுடன் மோதலாம்.
* நேற்று வெற்றி பெற்ற சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை பெற்றது.



