பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய "பிளே ஆப்' சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு,
சென்னை அணி இன்று மும்பை அணியை பழி தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் லீக் சுற்று முடிந்து, "பிளே ஆப்' போட்டிகள் நடக்கின்றன. "நடப்பு சாம்பியன்' சென்னை அணி, துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. கடைசியாக பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வாய்ப்பை கோட்டை விட, அதிக "ரன்ரேட்' அடிப்படையில் நான்காவது அணியாக சென்னை தகுதி பெற்றது.
நிலையற்ற பேட்டிங்:
கேப்டன் தோனி (269 ரன்கள்), ரெய்னா (341), முரளி விஜய் (180), மைக்கேல் ஹசி, டு பிளசி ஆகிய நட்சத்திர வீரர்கள் திணறுவது பலவீனம். பின் வரிசையில் ஆல்பி மார்கல் (107), பிராவோ (305) இருப்பது பலம் தான் என்றாலும், ரூ. 10 கோடிக்கு வாங்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா, கடைசி வரை வீணாகவே போய்விட்டார். இன்று என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை. ராஜஸ்தான் அணிக்கு எதிராக 6 பந்தில் 18 ரன்கள் எடுத்த அனிருதா ஸ்ரீகாந்த்தை, பேட்டிங் ஆர்டரில் முன்னதாக களமிறக்கினால் அதிக ரன்கள் சேர்க்கலாம்.
ஹில்பெனாஸ் ஆறுதல்:
பவுலிங்கில் ஹில்பெனாஸ் வருகை ஆறுதல் தந்தது. 6 போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய இவருடன், 9 விக்கெட் கைப்பற்றிய சுழல் வீரர் அஷ்வின், எழுச்சி பெற்றால் நல்லது. மற்றபடி, பிராவோ, ஆல்பி மார்கல், ஜகாதி ஆகியோருடன் களமிறங்கலாம்.
பேட்டிங் எழுச்சி:
சென்னை தட்டுத் தடுமாறி வந்த அதேநேரத்தில், ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆக்ரோஷமாக "பிளே ஆப்' சுற்றுக்கு வந்துள்ளது மும்பை. துவக்க வீரர்களை தொடர்ந்து மாற்றி வரும் இந்த அணிக்கு, கடைசியாக சச்சினுடன், ஸ்மித் இணைந்துள்ளார். இன்று இவர் தொடர்வார் என நம்பலாம்.
இத்தொடரில் சதம் அடித்த ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், போலார்டு, கிப்ஸ் மற்றும் ராயுடு ஆகியோரும் பேட்டிங்கில், திடீர் திடீரென சொதப்புவது பலவீனம்.
மலிங்கா மிரட்டல்:
மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. இதுவரை 22 விக்கெட் வீழ்த்திய இவரது கடைசி நேர "யார்க்கர்கள்', சென்னை அணிக்கு தொல்லை தருவது நிச்சயம்.
கடந்த போட்டியில் 3 விக்கெட் சாய்த்த குல்கர்னி, முனாப் படேல் (15 விக்.,), போலார்டு (15), ஆர்.பி.சிங் (10) இவருக்கு கை கொடுக்கலாம். சுழலில் சீனியர் ஹர்பஜன் 16 போட்டியில் 6 விக்கெட் மட்டும் எடுத்தார். இவர் எப்போது வேண்டுமானாலும் "பார்முக்கு' திரும்பலாம்.
தோல்வி கிடையாது:
இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேற நேரிடும். தவிர, பெங்களூரு மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டிகளில் மும்பை அணி இதுவரை தோற்றதில்லை.
இத்தொடரின் இரு லீக் போட்டிகளிலும் மும்பை அணி சென்னையை வீழ்த்தியுள்ளது. இதுபோன்ற சாதகங்கள் மும்பைக்கு இருந்தாலும், தோனியின் சென்னை அணிக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்து, பழி தீர்க்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
அந்த நான்கு வீரர்கள் யார்
சென்னை அணியின் இன்றைய வெற்றி, அணித் தேர்வைப் பொறுத்து தான் உள்ளது. டு பிளசியை பொறுத்த வரை (13 போட்டி, 398 ரன்கள்) "ஸ்டிரைக் ரேட்' 130.92 வைத்துள்ளார். இத்தொடரில் 3 அரைசதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
9வது போட்டிக்குப் பின், மைக்கேல் ஹசி வந்துவிட, இவரது வாய்ப்பு நழுவியது. இதுவரை 5 போட்டியில் (ஒரு அரைசதம் உட்பட 138 ரன்கள்) பங்கேற்ற ஹசியின் "ஸ்டிரைக் ரேட்' (104.54) மோசமாக உள்ளது. பந்துகளை அதிகம் வீணடிக்கிறார்.
"மிடில் ஆர்டரில்' உள்ள ஆல்பி மார்கல், ஒரு ஓவரில் 28 ரன்கள் அடித்து, வெற்றிக்கு கைகொடுத்தார். கடைசி பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார் பிராவோ. இந்த இரண்டு "ஆல் ரவுண்டர்களும்' அணியில் இருப்பது பாதுகாப்பானது. பவுலிங்கில் ஹில்பெனாஸ், இரு முறை தன்னை நிரூபித்தார்.
இன்றைய போட்டியில் பிராவோ, மார்கல், ஹில்பெனாசுடன் களமிறங்க டுபிளசிக்கு முன்னுரிமை தர வேண்டும். இந்த நால்வர் கூட்டணி, சென்னை அணிக்கு வெற்றி தேடித்தரும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.



