Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் "சுழலில் மும்பை காலி

கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் "சுழலில் மும்பை காலி

 

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம்

"பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. "சுழலில் மிரட்டிய நரைன் நான்கு விக்கெட் வீழ்த்தி, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.

 

மும்பையில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 65வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன், "பீல்டிங் தேர்வு செய்தார்.

ஆர்.பி.சிங் மிரட்டல்:

கோல்கட்டா அணியின் "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். ஆர்.பி.சிங் வீசிய போட்டியின் 2வது ஓவரின் 2வது பந்தில் பிரண்டன் மெக்கலம்(1) அவுட்டானார். 3வது பந்தில் காலிஸ்(0) போல்டானார். அடுத்து வந்த மனோஜ் திவாரி ஒரு ரன் எடுக்க, ஆர்.பி.சிங்கின் "ஹாட்ரிக் வாய்ப்பு நழுவியது. போலார்டு "வேகத்தில் காம்பிர்(27) போல்டாக, 8.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து திணறியது.

திவாரி அசத்தல்:

பின் சாகிப் அல் ஹசன், மனோஜ் திவாரி இணைந்து போராடினர். அசத்தலாக ஆடிய திவாரி, போலார்டு ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன், மலிங்கா பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். டுவைன் ஸ்மித் பந்தில் சாகிப் (13) போல்டானார். சிறிது நேரத்தில் முனாப் படேல் "வேகத்தில் திவாரி(41) அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.

கடைசி கட்டத்தில் ரஜத் பாட்யா(12), யூசுப் பதான்(21*), நரைன்(9*) கைகொடுக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.

விக்கெட் மடமட:

சுலப இலக்கை விரட்டிய மும்பை அணியும் துவக்கத்தில் சரிந்தது. இக்பால் அப்துல்லா பந்தில் கிப்ஸ்(13) வெளியேறினார். காலிஸ் ஓவரில் சச்சின் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார். உடனே தனது "துருப்புச்சீட்டான நரைனை அழைத்தார் கேப்டன் காம்பிர். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. நரைன் "சுழலில் சச்சின்(27) போல்டானார். பாலாஜி பந்தில் தினேஷ் கார்த்திக்(21) அவுட்டாக, 12.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்து தவித்தது. தொடர்ந்து சாகிப் வலையில் ராயுடு(11) சிக்க, நெருக்கடி அதிகரித்தது.

காலிஸ் கலக்கல்:

இந்த நேரத்தில் போட்டியின் 17வது ஓவரை வீசிய காலிஸ் இரட்டை "அடி கொடுத்தார். 4வது பந்தில் "ஆபத்தான போலார்டை(8) வெளியேற்றினார். 5வது பந்தில் டுவைன் ஸ்மித்தை(0) அவுட்டாக்கி, திருப்புமுனை ஏற்படுத்தினார். அடுத்த ஓவரை வீசிய நரைன் இம்முறை ஹர்பஜன்(1), ரோகித் சர்மா(12) ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரது அடுத்த ஓவரில் ஆர்.பி.சிங்.(3) வெளியேற, மும்பை அணி 19.1 ஓவரில் 108 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

நான்கு விக்கெட் வீழ்த்திய நரைன், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.